மும்பைக்கு 3, விதர்பாவுக்கு 2, ம.பி-க்கு 1... ‘ரஞ்சிக் கோப்பை ஆசான்’ சந்திரகாந்த் பண்டிட் யார்?

சந்திரகாந்த் பண்டிட்
சந்திரகாந்த் பண்டிட்
Updated on
2 min read

இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்று கொடுக்கும் பயிற்சியாளராக கலக்கி வருகிறார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சந்திரகாந்த் பண்டிட்.

டொமஸ்டிக் கிரிக்கெட் அரங்கில் இவர் வழிநடத்தும் அணிகள்தான் சாம்பியன் பட்டம் வெல்கின்றன. இதுவரையில் மும்பைக்கு 3, விதர்பாவுக்கு 2, மத்திய பிரதேசத்திற்கு 1 என ஆறு ரஞ்சிக் கோப்பைகளை தான் பயிற்சி கொடுத்த அணியை வெல்லச் செய்துள்ளார்.

கடந்த 1986 முதல் 1992 வரையில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடியவர் சந்திரகாந்த் பண்டிட். இவரை சந்து பண்டிட் என அழைப்பார்கள். மகாராஷ்டிராவை சேர்ந்தவர். இந்திய அணிக்காக 5 டெஸ்ட் மற்றும் 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

டொமஸ்டிக் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர் அசாம், மத்தியப் பிரதேசம் மற்றும் மும்பை அணிகளுக்காக டொமஸ்டிக் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். ஓய்வுக்கு பிறகு கடந்த இரண்டு தசாப்தங்களாக பயிற்சியாளராக ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார் அவர்.

இந்த இருபது ஆண்டுகளில் வெவ்வேறு அணிகள் அவரது பயிற்சியின் கீழ் ரஞ்சிக் கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. பயிற்சியாளராக அவர் கடந்து வந்துள்ள மைல்கல்லை கொஞ்சம் பார்ப்போம்.

மும்பைக்கு முத்தான 3 ரஞ்சிக் கோப்பை

இரண்டு முறை மும்பை அணியின் பயிற்சியாளராக பண்டிட் பணியாற்றியுள்ளார். அவரது பயிற்சியின் கீழ் 2002-03, 2003-04 என இரண்டு சீசன்களில் ரஞ்சிக் கோப்பை வென்றுள்ளது மும்பை. பின்னர் மும்பை அணியில் இருந்து விலகி வேறு சில அணிகளுக்கு பயிற்சியாளராக அவர் பணியாற்றி இருந்தார்.

மீண்டும் 2015-16 சீசனுக்காக மும்பை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த சீசனில் ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி. அதன்பிறகு அந்த அணி ரஞ்சியில் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை.

விதர்பா: 2 ரஞ்சிக் கோப்பை & 2 இரானி கோப்பை

மும்பை அணி காலம் காலமாக ரஞ்சிக் கோப்பை போன்ற தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு அணி. ஆனால், விதர்பா அப்படி இல்லை. 2017-18 சீசனுக்கு முன்னர் வரை ரஞ்சி தொடரில் காலிறுதியை தாண்டாத ஒரு அணியாக மட்டுமே அந்த அணி இருந்தது. ஆனால், அவை அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்தார் பண்டிட்.

அந்த அணியின் பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டதும் 2017-18 மற்றும் 2018-19 என இரண்டு முறையை விதர்பாவை ரஞ்சியில் சாம்பியன் பட்டம் வெல்ல செய்தார். அதற்கு போனஸாக அமைந்தது அந்த இரண்டு சீசன்களுக்குமான இரானி கோப்பை.

மத்திய பிரதேசம்: 1 ரஞ்சிக் கோப்பை

இந்த நிலையில், மத்தியப் பிரதேச அணியுடன் இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக இணைந்தார் பண்டிட். இந்த அணிக்கும் அவருக்கும் இடையே உணர்வுபூர்வமாக ஒரு பந்தம் உண்டு. சரியாக 23 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியப் பிரதேச அணியை கேப்டனாக வழிநடத்தி 1998-99 ரஞ்சி சீசனில் பெங்களூருவில் நடைபெற்ற இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றிருந்தார் பண்டிட். ஆனால், அவரால் அப்போது கேப்டனாக கோப்பையை வெல்ல முடியவில்லை.

அந்தச் சூழலில்தான் அதே அணிக்காக பயிற்சியாளராக தன் பணியை மேற்கொண்டார். இப்போது அதே பெங்களுருவில் அதே மத்தியப் பிரதேச அணி 2021-22 ரஞ்சி சீசனில் மும்பையை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இப்போது பயிற்சியாளர் பண்டிட் மத்தியப் பிரதேச அணிக்காக கோப்பை வென்றுள்ளார்.

அவருக்கு ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோதும், அதை மறுத்துள்ளதாக தெரிகிறது. அது துணைப் பயிற்சியாளர் பணி என சொல்லப்படுகிறது.

பண்டிட் மிகவும் கண்டிப்பானவர் என கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. அதை அவரே உறுதி செய்யும் வகையில் பேசியதிலிருந்து...

"நான் அதிகம் எமோஷனலாக பேசுபவன். சிலருக்கு நான் செயல்படும் விதம் பிடிக்காது. ஆனால், அதை எனது வேலையாக நான் பார்க்கிறேன். எனது பணிகளை மேற்கொள்ளும் விதம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நான் செய்வதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கும். உங்களை அது இலக்கு நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு செயல்முறையாகும்" என அவரே தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in