

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது இந்திய கிரிக்கெட் அணி. அழுத்தம் நிறைந்த அந்த ஓவரை இந்திய அணிக்காக வீசி இருந்தார் இளம் வீரர் உம்ரான் மாலிக். அதற்கான காரணம் என்ன என்பது குறித்த விளக்கம் அளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்தினார். தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதில் கடைசி போட்டியில் ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றிருந்தது. இரு அணிகளும் வெற்றிக்காக போராடி கொண்டிருந்த சமயம். அந்த ஓவரை இந்திய அணி சார்பில் உம்ரான் மாலிக் வீசி வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 225 ரன்களை குவித்தது. 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது அயர்லாந்து. தொடக்கம் முதலே ரன் குவிப்பதில் குறியாக இருந்தனர் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள். அதன் பலனாக 19 ஓவர்களில் 209 ரன்களை குவித்தது அந்த அணி. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை வீசுமாறு உம்ரான் மாலிக்கை பணித்தார் இந்திய கேப்டன் ஹர்திக். அந்த ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் உம்ரான். அதன் பலனாக 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
"ஆட்டத்தில் இருந்த அழுத்தத்தை புறந்தள்ளிவிட்டு உம்ரான் பந்து வீச நான் அனுமதித்தேன். அவர் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. அவரது பந்துவீச்சில் வேகம் உள்ளது. அப்படியொரு வேகத்தை எதிர்கொண்டு கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுப்பது கடினம். எதிரணியினர் சிறப்பாக பேட் செய்திருந்தனர். அதே நேரத்தில் அவர்களை எங்கள் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்தியும் இருந்தனர். முதல் முறை கேப்டனாக தொடரை வென்றதில் மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார் ஹர்திக்.