

டப்லின்: அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சார்பில் சஞ்சு சாம்சன் ஆடும் லெவனில் களம் கண்டுள்ளார். அது குறித்த அறிவிப்பை டாஸின் போது கேப்டன் ஹர்திக் பாண்டியா சொன்னதும் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். அந்த வீடியோ கவனம் ஈர்த்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழிநடத்துகிறார். முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டி ‘தி வில்லேஜ்’ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
"நாங்கள் முதலில் பேட் செய்ய விரும்புகிறோம். அணியில் மூன்று மாற்றங்கள் செய்துள்ளோம். ருதுராஜுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுகிறார். ஆவேஷ் கானுக்கு மாற்றாக ஹர்ஷல் படேலும், சஹாலுக்கு மாற்றாக பிஷ்னோயும் விளையாடுகின்றனர்" என டாஸின் போது தெரிவித்திருந்தார் ஹர்திக்.
அப்போது அவர் சஞ்சு சாம்சன் பெயரை சொன்னதும் மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர். 'மக்கள் அதை விரும்புகிறார்கள் என நினைக்கிறன்' என தெரிவித்தார் ஹர்திக்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன், 31 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.