Published : 28 Jun 2022 03:53 PM
Last Updated : 28 Jun 2022 03:53 PM

இந்திய ஹாக்கி ஜாம்பவான் வரீந்தர் சிங் மறைவு; ஒலிம்பிக், உலகக் கோப்பையை வென்ற அணியில் விளையாடியவர்

வரீந்தர் சிங்.

ஜலந்தர்: இந்திய ஹாக்கி ஜாம்பவான்களில் ஒருவர் என அறியப்படும் வரீந்தர் சிங் (Varinder Singh) காலமானார். அவருக்கு வயது 75.

ஹாக்கி உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய அணியில் விளையாடிய வீரர்களில் அவரும் ஒருவர். 'ஹாக்கி இந்தியா' அமைப்பு அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்திய நாடு விடுதலை பெற சில நாட்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் 1947, மே 16-ஆம் தேதி அன்று பிறந்தவர் வரீந்தர் சிங். 1970-களில் இந்திய ஹாக்கி அணியின் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் பங்கு கொண்டவர்.

1972 ஒலிம்பிக்கில் வெண்கலம், 1973 உலகக் கோப்பையில் வெள்ளி, 1975 உலகக் கோப்பையில் தங்கம், 1974 மற்றும் 1978 ஆசிய விளையாட்டுகளில் வெள்ளியும் வென்ற அணியில் அவர் விளையாடி உள்ளார்.

ஜலந்தரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். கடந்த 2007-இல் தயான் சந்த் விருதையும் அவருக்கு இந்திய அரசு கொடுத்து கவுரவித்தது.

இந்திய அணி இதுவரை ஹாக்கி உலகக் கோப்பையில் ஒரே ஒரு முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அந்த அணியில் விளையாடியவர் தான் வரீந்தர் சிங்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x