

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடைசியாக எப்போது சதம் பதிவு செய்தார் என்பது தனக்கு நினைவில் இல்லை என்றும், ஆனால் அந்த கடினமான சூழலை அவர் கடந்து விட்டதால் இனி அவருக்கு வசந்த காலம்தான் எனவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார் விராட் கோலி. இருந்தும் ஏனோ கடந்த 2019 நவம்பருக்குப் பின் அவர் சதம் பதிவு செய்யாமல் உள்ளார். மூன்று ஃபார்மெட் கிரிக்கெட்டிலும் இந்த நிலை தொடர்வது குறிப்பிடத்தக்கது.
தனது அடுத்த சதத்தை அவர் எப்போது பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில், சேவாக் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
"கடைசியாக கோலி எப்போது சதம் விளாசினார் என உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? எனக்கு அறவே அது குறித்து நியாபகம் இல்லை. ஆனால், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான தொடரை உறுதி செய்யும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் அவர் பெரிய அளவில் ரன் சேர்க்க வேண்டும் என நிச்சயம் விரும்புவார்.
அவரது கடினமான காலம் எல்லாம் முடிந்துவிட்டது என நான் கருதுகிறேன். அவருக்கான நல்ல காலம் தொடங்கிவிட்டதாகவே நான் பார்க்கிறேன். பயிற்சி ஆட்டத்தில் அரை சதம் பதிவு செய்துள்ளார்" என சேவாக் குறிப்பிட்டுள்ளார்.
வரும் 1-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்றாலோ அல்லது போட்டியை சமன் செய்தாலோ 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெல்லும்.
கடந்த ஆண்டு 4 போட்டிகள் நடந்த நிலையில், கடைசி போட்டி கரோனா பரவல் காரணமாக கைவிடப்பட்டது. கோலி 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8043 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 27 சதங்கள் அடங்கும்.