

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக பொல்லார்டும், டுவைன் பிராவோவும் மீண்டும் ஆடவேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் லாரா கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தத் தொடர் பாதியில் கைவிடப்பட்டது. இதன் காரணமாக பொல்லார்ட், டுவைன் பிராவோ ஆகியோரை ஒருநாள் தொடரில் அந்த அணியின் தேர்வுக்குழு சேர்க்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா மோதும் முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடர் அடுத்த மாதம் நடக்கவுள்ளது.
இத்தொடரில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் பொல்லார்டும், பிராவோவும் இடம்பெற வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா விருப்பம் தெரிவித்துள்ளார். டி20 போட்டிகளில் ஆடும் அவர்கள் இருவரும் ஒருநாள் போட்டிகளிலும் கவனம் செலுத்த வேண்டும், இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்திய தீவுகள் வலிமையான அணியாக திகழும் என்றும் அவர் கூறியுள்ளார்.