

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் 6-வது டிஎன்பிஎல் தொடர் திருநெல்வேலியில் இன்று (23-ம் தேதி) தொடங்குகிறது.
ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இம்முறை அங்கு போட்டிகள் நடத்தப்படவில்லை.
28 நாட்களில் மொத்தம் 32 போட்டிகள்
உள்ளூர் நாயகர்களை அடையாளம் காணும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், மதுரை பேந்த்தர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 28 நாட்களில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெறவுள்ளன.
தொடக்க நாளான இன்று திருநெல்வேலியில் உள்ள ஐசிஎல் சங்கர் நகர் மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.1.70 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும்.
இந்தத் தொடரில் 38 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் 2 வருடங்களுக்குப் பிறகு திருச்சி அணிக்காக களமிறங்குகிறார்.