

பிசிசிஐ தலைவர் மற்றும் ஐசிசி சேர்மன் பதவியை நேற்று முன்தினம் ஷசாங்க் மனோகர் ராஜினாமா செய்தார். ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே பிசிசிஐ தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதை ஷசாங்க் மனோகர் மறுத்துள்ளார். தனது ராஜினாமா குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “தற்போதைய சூழ்நிலையில் என்னால் வேலை செய்ய முடியவில்லை. நான் யார் பெயரையும் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை என்னால் கூறமுடியும், நிர்பந்தம் காரணமாகவே பதவி விலகினேன்” என்று தெரிவித்தார்.
----------------------------------------------
ஹாங்காங் டி 20-ல் கிளார்க்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இம்மாத இறுதியில் நடைபெறும் ஹாங்காங் டி 20 தொடரில் பங்கேற்க உள்ளார். 4 அணிகள் பங்கேற்கும் இந்த டி 20 தொடர் மே 28, 29-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 35 வயதான கிளார்க் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். 115 டெஸ்ட், 245 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் டி 20 போட்டிகளில் 34 ஆட்டத்தில் மட்டுமே விளையாடியிருந்தார். ஓய்வு பெற்ற பிறகு உள்ளூர் அளவிலான போட்டிகளில் கூட அவர் அதிக கவனம் செலுத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------
இங்கிலாந்து மகளிர் கேப்டன் ஓய்வு
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் சார்லோட்டி எட்வர்ட்ஸ் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான அவர் அனைத்து வடிவிலான போட்டியிலும் மொத்தமாக 10 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக கடந்த 20 ஆண்டுகளில் அவர் 309 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.