

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 9 முறை வென்ற ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், மணிக்கட்டு காயம் காரணமாக விலகுவதாக இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
“எனது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. நேற்று (வியாழனன்று) ஊசி போட்டுக் கொண்டு ஆடினேன். ஆனால் நேற்று இரவு முதல் வலி அதிகரித்துக் கொண்டே சென்றது, இன்று என்னால் எனது மணிக்கட்டை அசைக்க முடியவில்லை” என்று அவசரமாகக் கூட்டிய செய்தியாளர்கள் கூட்டத்தில் நடால் தெரிவித்தார்.
2-வது சுற்றில் பெகுண்டோ பாக்னிஸை 6-3, 6-0, 6-3 என்று நடால் வென்ற போது அவரது காயத்தின் சுவடு கூட தெரியவில்லை.
29-வயது ரபேல் நடாலின் இந்தப் பின்னடைவு அவருக்குப் பிடித்தமான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸிலிருந்து விலகச் செய்துள்ளது.
2009-ம் ஆண்டு முழங்கால் காயம் காரணமாக விம்பிள்டனில் தனது கடந்த சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க முடியாமல் போனது. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளிலும் காயம் காரணமாக நடால் ஆடவில்லை.
இந்நிலையில் அடுத்த மாதம் தொடங்கும் விம்பிள்டன் போட்டிகளுக்குள் காயத்திலிருந்து குணமாகி விளையாட வாய்ப்பிருப்பதாக நடால் தெரிவித்தார்.