

கொழும்பு: இலங்கையில் தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தேநீர் மற்றும் பன் கொடுத்து உபசரித்துள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஷன் மஹாநமா.
தீவு தேசமான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது அந்த தேசம். அந்த நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து இது போன்றதொரு நெருக்கடியை எதிர்கொண்டது இல்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கையில் பெட்ரோல் போன்ற எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு 400 ரூபாய்க்கு மேல் விற்பைன செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு நிறுவனங்கள் மற்றும் கல்விக் கூடங்களுக்கு இரண்டு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் மக்கள் மணி கணக்கில் வரிசையில் நின்று தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்பி வருகின்றனர். அப்படி காத்திருக்கும் மக்களுக்கு தேநீர் மற்றும் பன் கொடுத்து உபசரித்துள்ளார் ரோஷன் மஹாநமா. அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.
"பெட்ரோலுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு கம்யூனிட்டி மீல் ஷேர் குழுவினருடன் இணைந்து தேநீர் மற்றும் பன்கள் வழங்கினோம். நாளுக்கு நாள் வரிசையின் நீளம் நீண்டு கொண்டே போகிறது. மணி கணக்கில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். அதனால் வரிசையில் நிற்பவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுங்கள். உணவு மற்றும் நீர் ஆகாரத்தை கையுடன் எடுத்துச் செல்லுங்கள். உங்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் பக்கத்தில் இருப்பவர்களிடமோ அல்லது 1900 உதவி எண்ணுக்கோ கால் செய்யுங்கள். இந்த கடின சூழலில் நம்மை நாம் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார் அவர்.
கடந்த 1986 முதல் 1999 வரையில் இலங்கை அணியில் விளையாடியவர் ரோஷன் மஹாநமா. 1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணியில் விளையாடியவர். 213 ஒருநாள் போட்டிகள் மற்றும் 52 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார்.