Published : 18 Jun 2022 06:39 AM
Last Updated : 18 Jun 2022 06:39 AM

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் - 40 நாளில் 75 நகரங்களை வலம் வருகிறது

புதுடெல்லி: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிவரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. 1927 முதல் நடத்தப்பட்டும் வரும் புகழ்மிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் நடைபெற உள்ளது இதுவே முதன்முறை. இம்முறை 189 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் அதிகளவிலான நாடுகள் பங்கேற்க உள்ளதும் இதுவே முதன் முறையாகும்.

இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது. இந்த ஜோதி ஓட்டமானது ஒவ்வொரு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போதும் செஸ் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கும் என்றும் ஜோதியானது போட்டியை நடத்தும் நகரத்தை அடைவதற்கு முன்னர் சர்வதேச செஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி செஸ் ஒலிம்பியாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் ஜோதி ஓட்டம் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

முன்னதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி டிவோர்கோவிச் முறைப்படி ஜோதியை பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார். அதை, பிரதமர் மோடி, கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதனிடம் வழங்குவார்.

75 நகரங்களில் பயணம்

இந்த ஜோதி 40 நாட்களில் நாட்டில் உள்ள 75 நகரங்களுக்கு பயணம் செய்து இறுதியாக போட்டி நடைபெறும் சென்னை அடுத்த மகாபலிபுரத்தை வந்தடையும். ஒவ்வொரு இடத்திலும் செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் ஜோதியை பெறுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x