Published : 17 Jun 2022 10:14 PM
Last Updated : 17 Jun 2022 10:14 PM

44-வது செஸ் ஒலிம்பியாட் @ சென்னை | ஜூன் 19-ல் ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் ஜூன் 19 மாலை 5 மணியளவில் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

இந்த ஆண்டு முதன் முறையாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கமான ஃபிடே (FIDE), ஒலிம்பிக் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்களில் இதுபோன்று நடத்தப்பட்டதில்லை.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை நடத்தும் முதலாவது நாடு இந்தியா ஆகும். குறிப்பாக செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு உள்ள தொடர்பை மேலும் உச்சத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக, செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஜோதி தொடர் ஓட்டம், இனி எப்போதும் இந்தியாவிலிருந்தே தொடங்கி, போட்டி நடைபெறும் நாட்டை அடைவதற்கு முன்பாக அனைத்து கண்டங்களுக்கும் எடுத்துச் செல்லப்படும்.

ஃபிடே தலைவர் அர்கடி துவார்கோவிச், ஜோதியை பிரதமரிடம் வழங்க, அவர் அதனை கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைப்பார். அதன் பிறகு இந்த ஜோதி, 40 நாட்களுக்குள் 75 நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஏற்றிவைக்கப்படும். அனைத்து இடங்களிலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் இந்த ஜோதியை பெற்றுக் கொள்வார்கள்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், ஜூலை 28, 2022 தொடங்கி, ஆகஸ்ட் 10, 2022 வரை சென்னையில் நடைபெறும். பெருமைக்குரிய இந்தப் போட்டி 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் முதன்முறையாகவும், ஆசியாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் இப்போதுதான் நடத்தப்படுகிறது. 189 நாடுகள் பங்கேற்க இருப்பதன் மூலம், இந்தப் போட்டியே, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளிலேயே அதிக வீரர்கள் பங்கேற்கும் போட்டியாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x