

வயநாடு: கேரளாவைச் சேர்ந்த 64 வயதான லாரி ஓட்டுநர் ஒருவர் கால்பந்து விளையாட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள அம்பலவாயல் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். 64 வயதான அவர் கால்பந்து விளையாட்டில் அசத்தி வருகிறார். அவரை குறித்து அறிந்த PRSOCCERART என்ற பெயரில் வீடியோக்களை பகிர்ந்து வரும் யூடியூபர் தனது சேனலில் அவரது வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ஜேம்ஸ் கால்பந்து விளையாட்டில் அசத்தி உள்ளார். பந்தை ஜகில் செய்வது ஆகட்டும், பந்தை தட்டி செல்வது என அனைத்திலும் அவரது ஆட்ட நேர்த்தி வெளிப்படுகிறது. அந்த வீடியோ யூடியூப், யூடியூப் ஷார்ட்ஸ், இன்ஸ்ட்டாகிராம் போன்ற தளங்களில் லட்சோப லட்ச வியூஸ்களை பெற்றுள்ளது.
"நான் 1970-களில் இருந்து கால்பந்து விளையாடி வருகிறேன். எனக்கு அப்போது நீண்ட நேரம் இந்த விளையாட்டை விளையாட நேரம் கிடைக்காது. விவசாயம் சார்ந்த வேலைகளில் இருந்ததால் விளையாட்டுக்கு அப்போது நேரம் இல்லை. இப்போது எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கால்பந்து விளையாடி வருகிறேன். இதில் வருத்தம் என்னவென்றால் எனது வயது காரணமாக முன்பை போல முழு எனர்ஜியுடன் என்னால் விளையாட முடியவில்லை. இருந்தாலும் கால்பந்து விளையாட்டின் மீது நான் வைத்துள்ள சிநேகம் என்னை இந்த விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட செய்கிறது" என தெரிவித்துள்ளார் ஜேம்ஸ்.
வயநாடு கால்பந்தாட்ட அணியில் இவரும் அங்கம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் ஜேம்ஸ், தான் செல்லும் இடமெல்லாம் கால்பந்தாட்ட கிட்டை கையேடு கொண்டு செல்வதாக தெரிகிறது. இந்த ஆண்டு பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் ஜேம்ஸின் கதை இந்தியாவில் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டுள்ள பலருக்கும் இன்ஸ்பிரேஷன் கொடுக்கலாம்.
தொடர்ந்து அவர் கால்பந்து விளையாட வாழ்த்துவோம்!
வீடியோ இங்கே...