விராட் கோலி, டி வில்லியர்ஸ்: பேட்மேன், சூப்பர்மேன் போன்றவர்கள்: கிறிஸ் கெய்ல் புகழாரம்

விராட் கோலி, டி வில்லியர்ஸ்: பேட்மேன், சூப்பர்மேன் போன்றவர்கள்: கிறிஸ் கெய்ல் புகழாரம்
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 183 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 18.4 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 6-வது வெற்றியை பதிவு செய்தது.

விராட் கோலி 51 பந்துகளில் 75 ரன்களும், டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் கோலி 752 ரன்களும், டிவில்லியர்ஸ் 597 ரன்களும் குவித்துள்ளனர். இருவரும் இணைந்து மொத்தம் 1,349 ரன்கள் குவித்துள்ளனர்.

அதிலும் கோலி ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். கிறிஸ் கெயில் (2012), மைக் ஹசி (2013) ஆகியோர் தலா 733 ரன்கள் குவித்ததே ஒரு சீசனில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. அதை இப்போது கோலி முறியடித்துள்ளார்.

இந்நிலையில், விராட் கோலியும், டி வில்லியர்சும் பேட்மேன் - சூப்பர்மேன் போன்றவர்கள் என்று கிறிஸ் கெயில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, " இவர்கள் இருவரும் பேட்மேன், சூப்பர்மேன் போன்று விளையாடுகிறார்கள். அவர்கள் வாழ்வின் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார்கள், முக்கியமாக கோலி.

இருவரும் தொடர்ந்து நன்றாக விளையாடி ரன்கள் குவிக்கவேண்டும். பெங்களூரு அணிக்கு பல நன்மைகளைச் செய்துவருகிறார்கள். நெருக்கடியான சூழ்நிலையில் கோலியும், டி வில்லியர்சும் சிறப்பாக விளையாடுகின்றனர்.

பாராட்டுகள் நிச்சயம் இவர்களுக்கே செல்ல வேண்டும். கோலி தலைமைத்துவத்தை சிறப்பாக மேற்கொள்கிறார். இதுவரை ஆடிய 12 போட்டிகளிலும் இருவரும் அருமையாக ஆடியுள்ளார்கள். தொடர்ந்து சிறப்பாக ஆடி வெற்றி பெற வைப்பார்கள் என எண்ணுகிறேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in