

போர்ச்சுக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்ததற்கு தனது மந்திரமே காரணம் என்று கானா நாட்டைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவர் கூறியுள்ளார்.
நானா க்வாகு போன்சாம் என்ற இந்த நபர் தன்னைத்தானே மந்திரவாதி என்று அழைத்துக் கொள்பவர். இவரது பெயருக்கு ‘Devil of Wednesday' என்று அர்த்தமாம்.
இவர் போர்ச்சுக்கல் சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குக் காயம் உண்டாக்க தொடர்ந்து கவனம் செலுத்தி வந்ததாக ஏஞ்செல் எஃப்.எம். ரேடியோவுக்கு பேட்டியளிக்கையில் தெரிவித்தார்.
இந்த சுயநியமன மந்திரவாதி அதில் கூறியதாவது:
"நான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது மந்திர சக்திகளை ஏவி விட்டேன், நான் இதில் மிகவும் உண்மையாக ஈடுபட்டேன், கடந்த வாரம் 4 நாய்களைத் தேடினேன், அதன் மூலம் 'காவிரி கபம்" என்ற ஒரு ஆவியை உருவாக்கினேன்.
அவரால் இந்தக் காயங்களிலிருந்து மீள முடியாது ஏனெனில் இது உடல் ரீதியானது அல்ல மந்திரத்தால் விளைந்தது. நான் 4 மாதங்களுக்கு முன்பே கூறினேன், ரொனால்டோவை நான் கண்காணித்து வருகிறேன் என்று, உலகக்கோப்பை போட்டிகளில் அவரால் விளையாட முடியாது என்று.
கானா அணிக்கு எதிராக அவர் விளையாடக்கூடாது என்று நான் முன்பே முடிவெடுத்து விட்டேன்.
இன்று அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது, நாளை தொடையில் ஏற்படும், மறுநாள் வேறு ஒரு இடத்தில் என்று காயம் மேலும் மேலும் வலுக்கும்"
இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
பிரிவு ஜி-யில் உள்ள கானா, போர்ச்சுக்கல் அணிகள் ஜூன் 26ஆம் தேதி மோதுகிறது.