Published : 15 Jun 2022 06:51 AM
Last Updated : 15 Jun 2022 06:51 AM

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48 ஆயிரம் கோடிக்கு ஏலம் விட்டது பிசிசிஐ

புதுடெல்லி: 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48,390.52 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிரித்து பிசிசிஐ ஏலம் விட்டது. 3 நாட்களாக நடைபெற்ற இந்த மின்னணு ஏலம் நேற்று முடிவடைந்தது. ஏலத்தின் 2-வது நாளான நேற்று முன்தினம் ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை டிஸ்னியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியது. ஒரு ஆட்டத்துக்கு ரூ.57.50 கோடி வீதம் 410 ஆட்டங்களுக்கு இந்த தொகையை ஸ்டார் குழுமம் செலுத்தும்.

அதேவேளையில் டிஜிட்டல் உரிமத்தை ஒரு ஆட்டத்துக்கு ரூ.50 கோடி வீதம் 410 ஆட்டங்களை ஒளிபரப்பும் உரிமையை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது.

மின்னணு ஏலத்தின் 3-வது நாளான நேற்று 18 போட்டிகளுக்கு (முதல் போட்டி, பிளே ஆஃப் சுற்றின் 4 ஆட்டங்கள், வார இறுதியில் ஒரே நாளில் நடத்தப்படும் இரு ஆட்டங்கள்) டிஜிட்டல் உரிமை இல்லாத தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தை வயாகாம் 18 குழுமம் கைப்பற்றியது. 5 வருட காலத்தில் 98 ஆட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுப்பை அந்த நிறுவனம் ரூ.3,257.52 கோடிக்கு ஏலம் எடுத்தது.

கடைசியாக இந்திய துணைக் கண்டங்களைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஒரு ஆட்டத்துக்கு ரூ.2.58 கோடி வீதம் 410 ஆட்டங்களுக்கு ரூ.1,058 கோடியில் ஏலம் எடுக்கப்பட்டது.

இதை வயாகாம் 18 மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவை எடுத்துள்ளன. இதன்படி ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை வயாகாம் 18 பெற்றுள்ளது. அதேவேளையில் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை டைம்ஸ் இன்டர்நெட் கைப்பற்றியுள்ளது.

4 பிரிவுகளில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ரூ.48,390.52 கோடிக்கு ஏலம் விட்டுள்ளது பிசிசிஐ. இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், “தொடக்கத்தில் இருந்தே ஐபிஎல், வளர்ச்சியுடன் ஒன்றுபட்டுள்ளது, இன்று (நேற்று) இந்திய கிரிக்கெட்டுக்கு மறக்க முடியாத நாளாகும். மின்னணு ஏலத்தின் மூலம் ஐபிஎல் மதிப்பு 48,390 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இப்போது ஒரு போட்டியின் மதிப்பின் அடிப்படையில் உலக அரங்கில் மிகவும் மதிப்புமிக்க 2-வது விளையாட்டு ஐபிஎல் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x