

நாட்டிங்கம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 650+ விக்கெட்களை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன். வரலாற்று சிறப்புமிக்க இந்த சாதனையை படைக்க நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி என அனைத்திலும் கிரிக்கெட் வெறி ஊறிப்போன ஒருவரால் மட்டுமே முடியும் என சொல்ல வேண்டும். அப்படியொரு கிரிக்கெட் வெறியை கொண்டவர அவர்.
40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் ஆண்டர்சன். அவரை ஜிம்மி என செல்லமாக அழைப்பது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானவர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆக்டிவாக விளையாடி வரும் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை காட்டிலும் ஷார்ட்டர் பார்மெட்டில் விளையாடவே அதிகம் விரும்புகிறார்கள். அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்கூட்டியே ஓய்வை அறிவித்த பல வீரர்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால் அதிலிருந்து மாறுபட்டவர் ஜிம்மி. கிரிக்கெட்டின் அசல் வடிவமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
அதற்காக வெறுமனே அப்படியே நின்று விடாமல் தனது ஃபிட்னெஸ், டயட் என அனைத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அதன் பலன்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக 650+ விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அண்மையில் அவர் எட்டியிருந்தார். நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் தான் ஜிம்மியின் 650-வது டெஸ்ட் விக்கெட்.
பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு அடியையும் களத்தில் கொஞ்சம் உஷாராக எடுத்து வைக்க வேண்டும். ஆண்டர்சன் இந்த காயங்களை எல்லாம் கடந்து தான் சாதனை படைத்துள்ளார். அதற்காக தன்னை தானே வருத்திக் கொண்டார். அவர் களத்தில் வெளிப்படுத்திய மெனக்கெடலின் பலன் இது.
வரும் நாட்களில் அவர் மேலும் பல விக்கெட்களை வீழ்த்தி இன்னும் பல சாதனைகளை படைக்கலாம். இங்கிலாந்து அணிக்காக 400, 500 மற்றும் 600 டெஸ்ட் விக்கெட்களை கைப்பற்றிய முதல் பவுலரும் அவர்தான். இதில் 600+ விக்கெட் சாதனை மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளராக அவர் அறிய செய்கிறது.