”ஐபிஎல் மீடியா உரிமத்துக்கு இப்படி ஓர் உயரிய நிலையா?!” - சுனில் கவாஸ்கர் வியப்பு

”ஐபிஎல் மீடியா உரிமத்துக்கு இப்படி ஓர் உயரிய நிலையா?!” - சுனில் கவாஸ்கர் வியப்பு
Updated on
1 min read

மும்பை: ஐபிஎல் மீடியா உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2023-2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் என இரண்டும் சேர்த்து ரூ.44,070 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தகவல். இது 2018-2022 வரையிலான ஐந்து ஆண்டு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியா உரிமத்திற்கான ஏலத்தில் பிரத்யேக போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமம் மற்றும் வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமம் என இரண்டு பிரிவுகளுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த ஐந்து ஆண்டுகளில் 410 போட்டிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு போட்டிக்குமான ஒளிபரப்பு உரிமம் என்பது ரூ.100 கோடிக்கு மேல் உள்ளது. இது டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை அடக்கியது.

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த உரிமத்தை பெற்ற நிறுவனங்கள் குறித்த விவரத்தை அதிகாரபூர்வமாக வெளியிடாமல் உள்ளது. ஸ்டார் இந்தியா, சோனி, ரிலையன்ஸ்-Viacom, ஜீ, சூப்பர் ஸ்போர்ட் மற்றும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஐபிஎல் மீடியா உரிமம் இப்படி ஒரு நிலையை எட்டும் என முதல் சீசனின்போது நான் நினைக்கவில்லை. இது மிகவும் அற்புதமான ஒன்று. தரமான கவரேஜ், அதனை விரும்பிய மக்கள் என இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். பிசிசிஐ-க்கு எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in