

புதுடெல்லி: கர்நாடக மாநிலத்தின் பெலகாவி பகுதியில் அமைந்துள்ள சாலையின் நடுவே தொங்கவிடப்பட்ட நூபுர் சர்மாவின் உருவ பொம்மை குறித்து தனது கருத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பதிவு செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து சொல்லியிருந்தார் பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா. தொடர்ந்து அவரது கருத்திற்காக கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இருந்தாலும் அவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.
இந்தப் போராட்டம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளது காவல்துறை. உத்தரப் பிரதேச மாநிலத்தில் வன்முறை வெடித்த நிலையில், அதற்கு காரணமானவர் என குற்றம்சாட்டப்பட்டவரின் வீடு இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெலகாவி பகுதியில் அமைந்துள்ள மசூதிக்கு அருகே சாலையின் நடுவே நூபுர் சர்மாவின் உருவ பொம்மை கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொங்கவிடப்பட்டது. அந்தப் படம் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்திருந்தது.
இந்நிலையில், அது குறித்து தனது கருத்தை ட்விட்டர் தளத்தில், கடந்த 10-ஆம் தேதி பகிர்ந்திருந்தார் வெங்கடேஷ் பிரசாத். அதனை ரீ-ட்வீட் செய்து கூடுதல் கருத்துகளை சேர்த்துள்ளார்.
"இது கர்நாடகாவில் தொங்கவிடப்பட்ட நூபுர் சர்மாவின் உருவப் பொம்மை. இதை பார்க்கும்போது இது 21-ஆம் நூற்றாண்டில் இருக்கும் இந்தியாதானா என்று நம்ப முடியவில்லை. அரசியலை ஒதுக்கிவைத்து விடும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இது கொஞ்சம் ஓவர். இது வெறும் உருவ பொம்மை மட்டுமல்ல, ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்" என தெரிவித்துள்ளார் வெங்கடேஷ் பிரசாத்.