

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் நேற்று தொடங்கியது. இதில் 10-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2023-2027) ஐ.பி.எல். போட்டிக்குரிய டிவி ஒளிபரப்பு உரிமம் மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கியது.
2018-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ரூ.16,347 கோடிக்கு டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. இந்த உரிமம் கடந்த ஐபிஎல் 15-வது சீசனுடன் முடிவுக்கு வந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து முதல்முறையாக மின்னணு ஏலம் மூலம் ஐபிஎல் போட்டி ஒளிபரப்பு உரிமம் வழங்கப்பட இருக்கிறது. இந்த உரிமத்தை பெறுவதற்காக டிஸ்னி-ஸ்டார், சோனி நெட்வொர்க், ஜீ குழுமம், சூப்பர்ஸ்போர்ட், டைம்ஸ் இன்டர்நெட், ரிலையன்ஸ் வியாகாம்18 உள்பட 10 முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டுள்ளன.
உரிமத்தைப் பெறுவதில் டிஸ்னி -ஸ்டார், சோனி நெட்வொர்க், ஜீ குழுமம், ரிலையன்ஸ் வியாகாம்18 ஆகிய நிறுவனங்களிடையே கடும் போட்டி இருந்தது. நேற்றுமாலை நிலவரப்படி ரூ.42 ஆயிரம்கோடிக்கும் அதிகமாக ஏலம் கேட்கப்பட்டதாக தகவல் வெளி யானது. ஏலத்தின் உரிமை எந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்ற தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.