

ஹெடிங்லேயில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் 3 விக்கெட்டுகளை 1 ரன்னை மட்டுமே கொடுத்து வீழ்த்தினார் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தசுன் ஷனகா. இதனால் இங்கிலாந்து 49/0 என்ற நிலையிலிருந்து 57/3 என்று சரிவு கண்டது.
தற்போது 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்து இங்கிலாந்து திணறி வருகிறது. அலெக்ஸ் ஹேல்ஸ் 42 ரன்களுடன் கிரீசில் இருக்கிறார்.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ், வானிலை மேகமூட்டமாக இருந்ததால் முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார். 49 ரன்கள் வரை குக் மற்றும் ஹேல்ஸ் ஆடினர். எரங்கா, பிரதீப், மேத்யூஸ், சமீரா ஆகியோர் வீசிய பிறகே 5-வது பவுலராக ஷனகாவை அழைத்தார்.
அவர் 16 ரன்களில் இருந்த குக்கிற்கு ஒரு அருமையான அவுட் ஸ்விங்கரை வீசி பெவிலியன் அனுப்பினா, இதனால் குக் 10,000 ரன்கள் மைல்கல்லை எட்ட முடியவில்லை.
அதே ஓவரில் காம்ப்டனையும் பூஜ்ஜியத்தில் வீழ்த்தினார் ஷனகா. டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 2-வது ஓவரையே வீசும் ஷனகா அறிமுக வீச்சாளராக ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதுவும் எட்ஜ், ஸ்லிப்பில் திரிமானே கேட்ச் பிடித்தார்.
பிறகு தனது அடுத்த ஓவரிலேயே இங்கிலாந்தின் அதிமுக்கிய வீரரான ஜோ ரூட்டையும் ரன்கள் எடுக்கும் முன்னரே வீழ்த்தினார் ஷனகா. இவரையும் ஆஃப் திசையில் டிரைவ் ஆட தூண்டிய பந்து, சற்று பலமாக அடிக்கச் சென்றார் ரூட், இதனால் எட்ஜ் ஆகி தேர்ட் ஸ்லிப்பில் மெண்டிஸிடம் கேட்ச் ஆனது.
8 பந்துகளில் 1 ரன் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தல் அறிமுக டெஸ்ட் போட்டி கண்டார் ஷனகா.
சிறிது நேரத்திற்கு முன் வின்சி என்ற வீரர் 9 ரன்கள் எடுத்த நிலையில் எரங்கா வீசிய மேலும் ஒரு ஃபுல் ஸ்விங் பந்துக்கு ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இங்கிலாந்து 70/4 என்று ஆனது.
தற்போது அபாய வீரர் பென் ஸ்டோக்ஸை 12 ரன்களில் வீழ்த்தினார் நுவான் பிரதீப். டிரைவ் ஆடும் போது கையில் மட்டை திரும்பியது இதனால் மிட் ஆனில் எளிதான கேட்ச் ஆனது .
அலெக்ஸ் ஹேல்ஸ் 43 ரன்களுடன் ஆட ஜானி பேர்ஸ்டோ களமிறங்கியுள்ளார்.