

ஐபிஎல் தொடருக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து விளையாட உள்ளது. அங்கு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரு டி 20 போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடர் ஜூன் 11-ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடும் என தகவல் கள் வெளியாகி உள்ளது. கேப்டன் தோனியும் இந்த தொடரில் விளையாடுவாரா என்பது உறுதி செய்யப்படாமல் இருக்கிறது.
கோலி கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா வுக்கு எதிரான தொடரில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அவர் 4 டெஸ்ட், 10 ஒருநாள் போட்டி மற்றும் பதினைந்து டி 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் தற்போது ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருகிறார்.
கோலியை போன்றே ரோஹித்தும் கடந்த 6 மாத காலமாக ஓய்வின்றி சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். வரும் மாதங்களில் இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இவற்றில் முதலாவதாக ஜிம்பாப்வே தொடரைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் செல்கிறது.
இதனால் இந்த தொடருக்கு முன்னணி வீரர்கள் ஆயத்தமாகும் வகையிலும், சிறிது காலம் ஓய்வு கொடுக்கும் வகையிலும் இந்த முடிவை பிசிசிஐ எடுக்கக்கூடும் என பெயர் கூற விரும்பாத கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஜிம்பாப்வே தொடரை தோனி புறக்கணிக்கும் பட்சத்தில் அஜிங்க்ய ரஹானே தலைமையில் இளம் வீரர்களை அடங்கிய இந்திய அணி தேர்வு செய்யப்படக்கூடும் என கூறப்படுகிறது.
விக்கெட் கீப்பராக தற்போது ஐபிஎல் தொடரில் அசத்தி வரும் பெங்களூரு அணியின் கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படுவார். மற்றொரு பெங்களூரு வீரரான சர்ப்பராஸ் கான், டெல்லி அணியில் விளையாடி வரும் ரிஷப் பந்த், சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிருணால் பாண்டியா உள்ளிட்டோரும் தேர்வுக்குழுவினரின் பார்வையில் படக்கூடும்.