

கட்டாக்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி இந்த தொடரின் முதல் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது தென்னாப்பிரிக்கா. ஒதிஷா மாநிலத்தின் கட்டாக் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்களை சேர்ந்தது. அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் (40 ரன்கள்), இஷான் கிஷன் (34 ரன்கள்), தினேஷ் கார்த்திக் (30 ரன்கள்) எடுத்திருந்தனர்.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா விரட்டியது. 29 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது அந்த அணி. இருந்தாலும் பவுமா மற்றும் ஹென்ரிச் கிளாசென், 64 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடர்ந்து வந்த மில்லர் உடன் 51 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் கிளாசென். 46 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானார்.
18.2 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாப்பிரிக்கா. இந்த தொடரில் மேலும் 3 போட்டிகள் எஞ்சியுள்ளன. அந்த மூன்றிலும் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும்.