Published : 11 Jun 2022 07:39 AM
Last Updated : 11 Jun 2022 07:39 AM

பந்துவீச்சில் திட்டங்களை செயல்படுத்தாததால் தோல்வி - ரிஷப் பந்த் விளக்கம்

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

212 ரன்களை இலக்கை விரட்டிய தென் ஆப்பிரிக்க அணி 5 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது. ராஸி வாண்டர் டஸன் 46 பந்துகளில், 75 ரன்களும் டேவிட் மில்லர் 31 பந்துகளில், 64 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர்.

வாண்டர் டஸன் 30 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்திருந்த போது கொடுத்த கேட்ச்சை ஸ்ரேயஸ் ஐயர் தவறவிட்டிருந்தார். இதற்கான பலனை இந்திய அணி அனுபவித்தது.

ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்த பின்னர் வாண்டர் டஸன் 16 பந்துகளில் 46 ரன்கள் விளாசி வெற்றியை வசப்படுத்தினார். 4-வது விக்கெட்டுக்கு வாண்டர் டஸன், டேவிட் மில்லருடன் இணைந்து 131 ரன்களை சேர்த்திருந்தார்.

இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் மூலம் தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வென்று சாதனை படைக்கலாம் என்ற இந்திய அணியின் கனவு தகர்ந்தது.

போட்டி முடிவடைந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கூறும்போது, “பேட்டிங்கில் போதுமான அளவில் ரன்கள் சேர்த்தோம். ஆனால் பந்து வீச்சில் திட்டங்களை சரியாக செயல்படுத்த தவறிவிட்டோம். ஆனால் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் பேட் செய்த போது வேகம் குறைந்த பந்துகள் வேலை செய்தன.

ஆனால் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆடுகளம் எளிதாக இருந்தது. 211 ரன்களை சேர்த்தது மகிழ்ச்சியாகவே இருந்தது. அடுத்த முறை இதேபோன்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x