

குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆப் ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் தனது பாணியில் ஆடி இறுதி வரை நின்று வெற்றியை உறுதி செய்தார்.
கோலி 0-வில் ஆட்டமிழந்தாலும் டிவில்லியர்ஸ், இக்பால் அப்துல்லா ஆகியோர் பெங்களூருவை இறுதிப்போட்டிக்கு இட்டுச் சென்றனர்.
தான் கடைசி வரை நின்று ஆடியதற்கு தங்கள் அணியில் ஆடிய முன்னாள் வீரர் ஜாகீர் கான் கூறியது தன் மனதில் இருந்தது என்று கூறினார் டிவில்லியர்ஸ். அதே போல் அதிக இறுதிப்போட்டிகளில் தான் விளையாடியதில்லை என்றும் இந்த இறுதிப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தொடர்பாக டி வில்லியர்ஸ் கூறியதாவது:
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக அளவிலான இறுதிப்போட்டிகளில் நான் விளையாடியதில்லை. பெங்களூரு அணிக்காக 6 வருடங்களாக விளையாடிய நிலையிலும் இறுதிப்போட்டியில் எங்கள் அணியை நான் பார்த்ததில்லை. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
இந்த ஆட்டத்தில் எங்களது செயல்திறன் குறைந்துவிட்டதாக ரசிகர்கள் நினைத்தனர். இந்த தருணத்தில் நாங்கள் பெற்ற வெற்றி பயனுள்ளதாக உள்ளது. கடந்த சில வருடங்களாகவே நாங்கள் கூட்டு முயற்சியாக சிறப்பாக விளையாடி வருகிறோம்.
ஆனால் இறுதிப்போட்டியை ரசித்து விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அது கிடைத்துள்ளது, நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் என்ன நடக்க போகிறது என்பது தெரியாது.
குல்கர்னி அற்புதமாக பந்து வீசினார். பாராட்டுகள் அவரையே சேரவேண்டும். ஆரம்பத்திலேயே அவர் ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். எங்கள் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர்கான் எப்போதுமே என்னிடம் ஒன்று கூறுவார், இது வேடிக்கையான சிறிய ஆட்டம், இதில் ஒருபோதும் நீ வெளியேறிவிடக்கூடாது என்பார்.
எனவே அது எனக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்தது. குஜராத் அணி பவர் பிளேவிலேயே கிட்டத்தட்ட வென்றிருந்தனர். அதன் பிறகு நாங்கள் போராடியே வென்றோம்.
இவ்வாறு டி வில்லியர்ஸ் கூறினார்.