

"சில நேரங்களில் இஸ்லாமியராக இருப்பது எளிதான காரியம் அல்ல" எனத் தெரிவித்துள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் வீரர் பால் போக்பா. Uninterrupted தளத்துடனான நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
29 வயதான அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் விளையாடியவர். இறுதிப் போட்டியில் கோல் பதிவு செய்து அசத்தியிருந்தார். கிளப் பிரிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வந்த போக்பா, இப்போது அந்த அணியுடனான ஒப்பந்தம் காலாவதியான காரணத்தால் வெளியேறி உள்ளார். இந்த நேர்காணலில் குத்துச்சண்டை வீரர் முகமது அலி, தனது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பேசியுள்ளார்.
"அமெரிக்க நாட்டின் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான முகமது அலி தான் எனது இன்ஸ்பிரேஷன். அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். நானும் மாறினேன். அப்போது எனக்கு 18 வயது. சில நேரங்களில் இஸ்லாமியராக இருப்பது எளிதானது கிடையாது. நாங்களும் சாதாரண மனிதர்கள் தான். நாங்கள் சார்ந்துள்ள மதத்தை மிகவும் தீவிரமாக பின்பற்ற முயற்சி செய்து வருகிறோம். எது செய்தாலும் நாம் அதை அனுபவித்து செய்யவேண்டும். நான் அதை செய்து வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் அவர் ஜுவான்டஸ் அணியில் இணைய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும்கால மக்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.