

கொல்கத்தா: இந்திய அணி கால்பந்து உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பது கனவு. அது கைகூட வேண்டுமென்றால் ஆசிய கோப்பையில் விளையாடுவது அதன் முதல் படியாக இருக்கும் என தெரிவித்துள்ளார் இந்திய கால்பந்தாட்ட வீரர் சந்தேஷ் ஜிங்கன் (Sandesh Jhingan).
இந்திய அணி இப்போது 2023 ஆசிய கோப்பைக்கான மூன்றாவது தகுதி சுற்றில் விளையாட உள்ளது. இதில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான் மற்றும் கம்போடியாவுக்கு எதிராக விளையாட உள்ளது இந்தியா. இந்த மூன்று போட்டிகளும் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். குரூப்-டி அணிகளுக்கான போட்டிகள் அனைத்தும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. நாளை போட்டிகள் ஆரம்பமாகிறது. இந்நிலையில் தான் இந்திய வீரர் சந்தேஷ் ஜிங்கன் இதனை தெரிவித்துள்ளார்.
"இந்திய அணி கால்பந்தாட்ட உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பது வீரர்கள், ரசிகர்கள் என அனைவரது கனவு. அது அனைவரின் விருப்பமும் கூட. ஆனால் அது நிறைவேற வேண்டும் என்றால் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் தவறாமல் தொடர்ச்சியாக பங்கேற்க வேண்டும். அது தான் உலகக் கோப்பை கனவுக்கான முதல் படியாக அமையும். அது எளிதான காரியம் அல்ல. ஆனால் இந்தியா இதை செய்தாக வேண்டும்" என தெரிவித்துள்ளார் அவர். அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களையும் பாராட்டியுள்ளார்.
இந்திய அணி இதுவரை பிஃபா கால்பந்தாட்ட தொடரில் ஒருமுறை கூட விளையாடியதில்லை. ஆசிய கோப்பையில் 1964, 1984, 2011 மற்றும் 2019-இல் இந்திய அணி விளையாடி உளள்து.