

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ஸ்பெயினின் ரபேல் நடால் 14-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்துள்ளார்.
பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 8-ம் நிலை வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த காஸ்பர் ரூடை எதிர்த்து விளையாடினார்.
இதில் ரபேல் நடால் 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த ஆட்டம் சுமார் 2 மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்றது.
பிரெஞ்சு ஓபனில் நடால் பட்டம் வெல்வது இது 14-வது முறையாகும். ஒட்டுமொத்தமாக அவர் கைப்பற்றும் 22-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாக அமைந்தது.
தற்போதைய பிரெஞ்சு ஓபன் பட்டம் மூலம் அதிக வயதில் பிரெஞ்சு ஓபனை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரபேல் நடால். அவருக்கு தற்போது 36 வயதாகிறது. இந்த வகையில் கடந்த 50 வருடங்களுக்கு முன்னர் ஸ்பெயினைச் சேர்ந்த ஆண்ட்ரெஸ் கிமெனோ தனது 34 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது.
மகளிர் இரட்டையர் பிரிவு…
மகளிர் இரட்டையர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்சியா, கிறிஸ்டினா மிலாடெனோவிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி சுற்றில் இந்த ஜோடி 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கோ கோ காஃப், ஜெசிகா பெகுலா ஜோடியை வீழ்த்தியது.