

விராட் கோலி 51 இன்னிங்ஸ்களுக்கு பிறகு நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக டக் அவுட் ஆனார்.
குஜராத் லயன்ஸை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்த நேற்றைய ஆட்டத்தில் தவல் குல்கர்னி பந்தை காலை நகர்த்தாமல் கட் ஆட முயன்று பந்து உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. ஸ்கோரரை தொந்தரவு செய்யும் முன்னரே விராட் கோலி அவுட்.
2014-ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக விராட் கோலி கடைசியாக டக் அவுட் ஆனார். பிறகு நேற்று டக் அவுட் ஆனார். இந்த இரண்டு டக்குகளுக்கும் இடையே 2378 ரன்களை அடித்தார் விராட் கோலி. இதில் இந்த ஐபில் போட்டித் தொடரில் மட்டும் 14 இன்னிங்ஸ்களில் எடுத்த 919 ரன்கள் அடங்கும்.
இதே போல் முன்பு ஒருமுறையும் 50 இன்னிங்ஸ்கள் டக் அடிக்காமல் இருந்துள்ளார் விராட் கோலி.
200 டி20 போட்டிகளில் ஆடிய 21 பேட்ஸ்மென்கள் பட்டியலில் விராட் கோலிதான் 6 டக்குகளுடன் குறைந்த டக் அடித்தவர் என்ற பெருமையை தக்க வைத்திருப்பவர்.
அதே போல் ஐபிஎல் தொடரில் பவர் பிளேவுக்குள் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 2-வது பவுலரானார் தவல் குல்கர்னி. 2011-ம் ஆண்டு கொச்சி டஸ்கர்ஸ் அணிக்கு எதிராக இசாந்த் சர்மா பவர் பிளேவுக்குள் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார். 2008-ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக ராவல்பிண்டி எஸ்க்பிரஸ் ஷோயப் அக்தர் பவர் பிளேவுக்கு முன்னதாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அஜித் சாண்டிலா 2012 ஐபிஎல் தொடரில் ஹேட்ரிக் உட்பட பவர் பிளேவுக்குள் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவல் குல்கர்னி மொத்தமாக பவர் பிளேவுக்குள் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இது ஒரு சாதனை.