Published : 03 Jun 2022 01:14 PM
Last Updated : 03 Jun 2022 01:14 PM

“அணியில் இடம்பெறுவது வேறு, ஆடும் லெவனில் இடம்பிடிப்பது வேறு” - அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து ஷேன் பாண்ட்

மும்பை: “அணியில் இடம்பெறுவது வேறு, ஆடும் லெவனில் இடம்பிடிப்பது வேறு” என மும்பை இந்தியன்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் இடம்பிடிக்காதது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் பல்லாயிரம் ரன்கள் குவித்த பேட்ஸ்மேன். அவரை பார்த்து வளர்ந்த அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் வந்தது. இடது கை பவுலரான அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். 22 வயதான அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

2021 மற்றும் 2022 என இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அர்ஜுன் பயணித்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அது குறித்து ரசிகர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். இப்போது ஐபிஎல் தொடர் முடிந்துவிட்டது. இந்நிலையில், ஷேன் பாண்ட் விளக்கம் கொடுத்துள்ளார்.

"மும்பை போன்றதொரு அணியில் இடம்பெறுவதும், ஆடும் லெவனில் இடம்பிடிப்பதும் வேறு வேறு. அர்ஜுன் அதற்காக இன்னும் கடின உழைப்புகளை செலுத்த வேண்டியுள்ளது. அதன்மூலம் அவர் தனது ஆட்டத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங்கில் அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நிச்சயம் அவர் அதனை செய்வார் என நம்புகிறேன். அதன் மூலம் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம்.

இந்த மாதிரியான லெவலில் கிரிக்கெட் விளையாடும் போது அணியில் உள்ள அனைவருக்கும் ஒரு போட்டியிலாவது வாய்ப்பு கொடுப்பதற்கும், தனக்கான இடத்தை ஒரு வீரர் பெறுவதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. இதை ஒரு கோடு அளவு உள்ள வித்தியாசம் என சொல்லலாம்" என பாண்ட் தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் டெண்டுல்கர் ஆடும் லெவனில் இடம்பிடிக்காதது குறித்து சச்சின் டெண்டுல்கரும் தன் மகனுக்கு அட்வைஸ் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x