Published : 03 Jun 2022 07:38 AM
Last Updated : 03 Jun 2022 07:38 AM

பிரெஞ்சு ஓபன் அரை இறுதியில் சிலிச் - ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி

மரின் சிலிச்

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் அரை இறுதி சுற்றுக்கு ஒற்றையர் பிரிவில் குரோஷியாவின் மரின் சிலிச், நார்வேயின் காஸ்பர் ரூட் முன்னேறினர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி அரை இறுதியில் தோல்வியடைந்தது.

பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 20-ம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிச், 7-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூபலேவை எதிர்கொண்டார். சுமார் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மரின் சிலிச் 5-7, 6-3, 6-4, 3-6, 7-6 (10-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபனில் மரின் சிலிச் அரை இறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த 8-ம் நிலை வீரரான காஸ்பர் ரூட் 6-1, 4-6, 7-6 (7-2), 6-3 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறிய முதல் நார்வே வீரர் என்ற பெருமையை பெற்றார் காஸ்பர் ரூட்.

போபண்ணா ஜோடி…

ஆடவருக்கான இரட்டையர் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடியானது எல் சவேடாரின் மார்செலோ அரேவலோ, நெதர்லாந்தின் ஜீன்-ஜூலியன் ரோஜர் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ரோகன் போபண்ணா ஜோடி 6-4, 3-6, 6-7 (8-10) என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x