

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் காலிறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். பாரிஸ் நகரில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில், நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் எதிர்கொண்டார்.
இரு ஜாம்பவான்களுக்கு இடையேயான ஆட்டம் பரபரப்புக்கு சற்றும் பஞ்சமில்லாமல் நடைபெற்றது. இதில் 6-2, 4-6, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை நடால் வீழ்த்தினார்.
இதன் மூலம் நடால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 8-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இதுவரை அவர் 10 பிரெஞ்சு ஓபன் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அரையிறுதியில் அவர் அலெக்ஸாண்டர் ஜெவ்ரெவுடன் விளையாடுகிறார்.
இந்த வெற்றி குறித்து நடால், "நான் உணர்ச்சி மிகுதியில் உள்ளேன். இங்கே விளையாடுவது எனக்கு முக்கியமானது. ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடுவது எப்போதுமே ஒரு சவால். அவரை வெல்ல ஒரே வழி தான் இருக்கிறது. போட்டி தொடங்கிய நிமிடம் முதல் இறுதி வரை உங்களின் பெஸ்ட் விளையாட்டைக் கொடுக்க வேண்டும்" என்றார்.
35 வயதான ரஃபேல் நடால் இதுவரை 113 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளார். 2005ல் அவர் முதன்முதலாக டைட்டில் வென்றார். இப்போது டென்னிஸ் தரவரிசையில் ஜோக்கோவிச் 30 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க. ரஃபேல் நடால் 29 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.