

சென்னை: தேசிய ஜூனியர் டென்னிகாய்ட் போட்டியில் சிறுமியர் பிரிவில் ஹட்சன் டென்னிகாய்ட் அகாடமியைச் சேர்ந்த எஸ்.மகேஷ்வரி தங்கப் பதக்கம் வென்றார்.
39-வது தேசிய ஜூனியர் டென்னிகாய்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தத் தொடரில் தமிழகம், ஹரியாணா, தெலங்கனா உள்ளிட்ட 18 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் சிறுமியர் பிரிவில் தமிழகத்தின் எஸ்.மகேஷ்வரி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், சக மாநிலத்தை சேர்ந்த தக் ஷிதாவை 5-21, 21-15, 22-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
சிறுவர் பிரிவில் தமிழகத்தின் எஸ்.கார்த்திக் ராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர், சக மாநிலத்தை சேர்ந்த சுகி வர்மனிடம் 21-11, 19-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். எஸ்.மகேஷ்வரி, எஸ்.கார்த்திக் ஆகியோர் சிவகாசி திருத்தங்கல் பகுதியில் உள்ள ஹட்சன் டென்னிகாய்ட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.