

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் சன்ரை சர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் கொல்கத்தா அணி களம் இறங்கியது.
டாஸில் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர், கொல் கத்தா அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். இதைத் தொடர்ந்து ஆடவந்த கொலகத்தா அணி, உத்தப்பா (25 ரன்கள்), காம் பீர் (16 ரன்கள்), மன்ரோ (10 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. இதனால் அந்த அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் என்று தடுமாறியது. இந்நிலையில் மணிஷ் பாண்டேவும், யூசுப் பதானும் சேர்ந்து கொல்கத்தா அணிக்கு புத்துயிர் கொடுத்தனர்.
இந்த ஐபிஎல் தொடரில் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் யூசுப் பதான், நேற்றும் ஐதராபாத் அணியின் பந்துவீச் சாளர்களை வெளுத்து வாங்கினார். 34 பந்துகளில் 52 ரன்களைக் குவித்த அவர் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக மணிஷ் பாண்டே 48 ரன்களைக் குவிக்க, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது.
வெற்றிபெற 172 ரன்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த ஐதராபாத் அணி, தொடக் கத்திலிருந்தே அடுத்தடுத்து விக் கெட்களை இழந்தது. வார்னர் (18 ரன்கள்), ஓஜா (15 ரன்கள்), யுவராஜ் சிங் (19 ரன்கள்), வில்லி யம்சன் (7 ரன்கள்) என்று அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கள் குறைந்த ரன்களில் அவுட் ஆனார்கள். ஷிகர் தவண் மட்டும் ஓரளவு நிலையாக ஆடி 51 ரன்களைச் சேர்த்தார். ஆனால் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு இது போதுமானதாக இல்லை. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இப்போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன் அதிகபட்சமாக 3 விக்கெட்களை எடுத்தார்.
இந்த போட்டியில் வென்றதைத் தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு பிளே ஆப் சுற்றுப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.