Published : 31 May 2022 06:18 PM
Last Updated : 31 May 2022 06:18 PM

‘அமைதி ஹர்திக், ஜாலி ஜெய்ஷா...’ - ஐபிஎல் சாம்பியன் குஜராத் மீது ‘ஃபிக்ஸிங்’ சந்தேகம் எழுப்பும் நெட்டிசன்கள்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்நிலையில், அது சார்ந்து மேட்ச் ஃபிக்ஸிங் (Match Fixing) குற்றச்சாட்டை ரசிகர்கள் சிலர் ட்விட்டர் தளத்தின் மூலமாக முன்வைத்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்று காட்டியுள்ளது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. இது அந்த அணிக்கு அறிமுக சீசனாகும். ஐபிஎல் களத்தில் குஜராத் எடுத்து வைத்துள்ள முதல் அடியே வெற்றித்தடமாக அமைந்துள்ளது.

லீக் சுற்றில் பல வெற்றிகளை குவித்து முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. தொடர்ந்து முதல் அணியாக ஃபைனலுக்குள் என்ட்ரி கொடுத்தது. இப்போது கோப்பையும் வென்று அசத்தியுள்ளது. அந்த அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் மேட்ச் வின்னர்களாக ஜொலித்ததே இதற்கு காரணம்.

இந்நிலையில், அந்த அணியின் வெற்றி குறித்து ரசிகர்கள் சிலர் மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் என்றாலே சூதாட்டம்தான் என சிலர் சொல்வதுண்டு. அது சர்வதேச கிரிக்கெட் களத்திலும் கடந்த காலங்களில் எதிரொலித்துள்ளது.

ஐபிஎல் அரங்கில் கடந்த 2013 சீசனில் சூதாட்ட குற்றச்சாட்டிற்கு சில அணிகளின் வீரர்களும், நிர்வாகிகளும் ஆளாகி இருந்தனர். அது முதலே இந்த மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வைக்கப்படுவது வழக்கம்.

குஜராத் வெற்றி: இறுதிப் போட்டியில் குஜராத் அணியின் வெற்றிக்கு முன்னின்று தலைமை தாங்கினார் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா. 3 விக்கெட்கள் மற்றும் 34 ரன்களை இறுதிப் போட்டியில் எடுத்திருந்தார் அவர். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை அவர் வென்றார். கில் 45 ரன்களும், மில்லர் 32 ரன்களும் குவித்தனர்.

மறுபக்கம் ராஜஸ்தான் அணியில் பட்லர் 39 ரன்களும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களும் எடுத்திருந்தனர். அவர்களை தவிர வேறு எந்தவொரு பேட்ஸ்மேனும் 15 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை. அதோடு ஃபீல்டிங்கின் போது இரண்டு கேட்ச்களையும் கோட்டை விட்டிருந்தது அந்த அணி. முடிவில் குஜராத் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தையும், கோப்பையையும் சேர்த்து வென்றது.

ரசிகர்களின் மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு: இந்தப் போட்டி குறித்து பல்வேறு கோணங்களில் ரசிகர்கள் மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பெரும்பாலும் இவை அனைத்தும் ட்வீட் பதிவுகளாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

"உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரது மகன் ஜெய்ஷா, பிசிசிஐ செயலாளர். குஜராத் அணி அகமதாபாத் மைதானத்தில் விளையாடுகிறது. வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆர்சிபி கோப்பையை வெல்லும் எனவா எதிர்பார்க்க முடியும்?" என பதிவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"கோப்பை வென்ற பிறகு ஹர்திக் பாண்டியா பெரிதும் தனது உணர்வுகளை வெளிக்காட்டவில்லை. அவருக்கு முடிவு முன்னதாகவே தெரிந்திருக்கும் போல" என ஒருவர் தெரிவித்திருந்தார்.

"ஐபிஎல் போட்டிகளை விரும்புபவர்கள் இன்னும் இது மேட்ச் ஃபிக்ஸிங் இல்லை என நினைத்திருப்பார்கள்" என ஒருவர் தெரிவித்துள்ளார்.#fixing என்ற ஹாஷ்டேக் போட்டு இதனை டிரெண்ட் செய்திருந்தனர் சமூக வலைதள பயனர்கள். குஜராத் அணியின் வெற்றிக்கு பிறகு அதனை ஜெய்ஷா கொண்டாடிய விதம் குறித்தும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படியாக பல கேள்விகள் நீள்கிறது. இருந்தாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்பு குழு சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

— tomy (@tomy_craig) May 29, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x