Published : 30 May 2022 08:07 PM
Last Updated : 30 May 2022 08:07 PM

ஹர்திக்கின் தலைமைப் பண்பு, பயிற்சியாளர்களின் பக்குவம்... - குஜராத் ‘ஐபிஎல் சாம்பியன்’ ஆனது எப்படி?

ஐபிஎல் கிரிக்கெட்டின் அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. அந்த அணியின் வெற்றி ரகசியத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.

குஜராத் அணி: கடந்த 2021 ஆகஸ்ட் வாக்கில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்கும் நோக்கில் ஏல நடைமுறையை அறிவித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஃப்ரான்சைஸ் அணியை 5,626 கோடி ரூபாய்க்கு வாங்கியது சிவிசி கேபிடல்ஸ். தொடர்ந்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் களத்தில் அவரது நீண்ட நெடிய அனுபவம் பெரிய அளவில் அந்த அணிக்கு கைகொடுத்தது.

ஹர்திக் பாண்டியா, கில், ரஷீத் கான் ஆகியோரை அந்த அணி ஏலத்திற்கு முன்னதாக தக்கவைத்தது. பிப்ரவரியில் நடைபெற்ற மெகா ஏலத்தை 52 கோடி ரூபாயுடன் எதிர்கொண்டது. ஏலத்தில் மேலும் 18 வீரர்களை வாங்கியது. அந்த அணியின் ஏல அணுகுமுறை விமர்சிக்கப்பட்டது. ஷமி, திவாட்டியா, ஜேசன் ராய் போன்ற வீரர்கள் அந்த அணியில் இருந்தனர். இதில் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே ராய் விலகி இருந்தார். அவர் அந்த அணியின் தொடக்க வீரர் என்ற கணக்கில் வாங்கப்பட்டிருந்தார். இப்படியாக சில பின்னடைவை குஜராத் எதிர்கொண்டது.

லீக் ஆட்டங்களில் எப்படி? - 14 போட்டிகளில் 10 வெற்றிகளைப் பெற்றது குஜராத் அணி. அதோடு முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து அசத்தியது. மற்ற அணிகள் எல்லாம் கடைசி கட்டத்தில்தான் பிளே-ஆஃப் என்ட்ரி கொடுத்திருந்தன.

முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, சாம்பியன் பட்டத்தையும் இப்போது வென்றுள்ளது. இத்தனைக்கும் இதுதான் குஜராத் அணியின் ஐபிஎல் அறிமுக சீசன். காலம் காலமாக ஐபிஎல் அரங்கில் ஆதிக்கம் செலுத்திய அணிகளை எல்லாம் ஓரங்கட்டியது குஜராத்.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பங்கு: தங்கள் அணியின் கேப்டனாக பாண்டியாவை அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தது குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம். அவரது உடற்தகுதியின் காரணமாக இந்திய அணியில் தனது இடத்தை இழந்திருந்தார் ஹர்திக். அவர் பந்து வீசுவாரா? கேப்டன்சி பணிக்கு சரிப்பட்டு வருவாரா? அந்தப் பொறுப்பை சரிவர கவனிப்பாரா? - இப்படி பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், கேப்டனாக அவரது செயல்பாடு அனைவருக்கும் சர்ப்ரைஸாக அமைந்தது. அதோடு ஆல்-ரவுண்டராகவும் அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலித்தார். 487 ரன்கள் (4 அரை சதங்கள் உட்பட) மற்றும் 8 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார் ஹர்திக். சில நேரங்களில் கேப்டனுக்கே உரிய பொறுப்புடன் விளையாடி அசத்தினார். முக்கியமாக நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி நேர்த்தியாக இன்னிங்ஸை அணுகினார் அவர். அனைத்தையும் விட பதற்றமான சூழலையும் மிகவும் கூலாக கையாண்டார். அணியில் ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை கொடுத்தார்.

"நாங்கள் சரியான பவுலர்களுடன் விளையாட விரும்பினோம். நான் பார்த்தவரையில் டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக பார்க்கப்பட்டு வருகிறது. பவுலர்களும் நமக்கு ஆட்டத்தில் வெற்றி பெற்றுக் கொடுப்பார்கள். அதை நாங்கள் நம்பினோம்" என கோப்பை வென்றதும் சொல்லி இருந்தார் ஹர்திக்.

கேரி கிர்ஸ்டன் & நெஹ்ராவின் தாக்கம்: மற்ற ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்கள் எல்லாம் ஆட்டத்தின் பரபரப்பான தருணங்களில் டென்ஷனாக காணப்பட்டால் குஜராத் அணியின் பயிற்சியாளர் குழு வேறுவிதமாக அதனை ஹேண்டில் செய்தது. மிகவும் அமைதியாகவே இருந்தது. எதற்குமே பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அனைத்தையும் ஒரு சிறு புன்னகையுடன் கடந்து சென்றது. அது அந்த அணியின் வீரர்கள் தொடங்கி அனைவருக்கும் பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும்.

முக்கியமாக பயிற்சியாளர் நெஹ்ரா மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் இருவரும் இணைந்து ஏற்படுத்திய தாக்கம் இது என சொல்லலாம். அது அந்த அணியின் வெற்றியில் இவர்கள் இருவருக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

மேட்ச் வின்னர்கள்: பொதுவாக ஓர் அணியில் மேட்ச் வின்னர்கள் என சிலர் இருப்பார்கள். ஆனால் குஜராத் அணி இந்த விஷயத்தில் தனியொரு வீரரை நம்பி இருக்கவில்லை. சாஹா, கில், மேத்யூ வேட், பாண்டியா, டேவிட் மில்லர், திவாட்டியா, ரஷீத் கான், ஷமி, யஷ் தயாள், ஃபெர்குசன், சாய் கிஷோர் என ஆடும் லெவனில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் மேட்ச் வின்னர்களாக ஜொலித்தனர்.

அவர் இல்லை என்றால் இவர். இவரும் இலையெனில் வேறொருவர் என யாரேனும் ஒரு வீரர் அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்து விடுகிறார்கள். ஹர்திக் இல்லாமல் ஒரு போட்டியில் வெற்றி பெற்றதை இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக சொல்லலாம்.

அந்த அணியின் பவுலிங் யூனிட் மிகவும் தரமாகவும், படு ஸ்ட்ராங்காகவும் இருந்தது. அதே நேரத்தில் இந்த சீசனில் குஜராத் அணி சேஸிங்கில் பட்டையை கிளப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x