IPL 2022 | கோப்பையை வென்ற குஜராத்; களத்தில் மனைவியைக் கட்டி அணைத்து நெகிழ்ந்த ஹர்திக்

IPL 2022 | கோப்பையை வென்ற குஜராத்; களத்தில் மனைவியைக் கட்டி அணைத்து நெகிழ்ந்த ஹர்திக்
Updated on
1 min read

அகமதாபாத்: தங்களது அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. வெற்றி தந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தன் மனைவி நடாஷாவை களத்திலேயே சில நிமிடங்கள் கட்டி அணைத்துக் கொண்டார் ஹர்திக் பாண்டியா. சமூக வலைதள பக்கத்தில் இப்போது அது பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தக்கவைத்தது குஜராத். அதோடு அவரை தங்கள் அணியின் கேப்டனாகவும் அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தது குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம். அவரது உடற்தகுதியின் காரணமாக இந்திய அணியில் தனது இடத்தை இழந்திருந்தார் ஹர்திக். அவர் பந்து வீசுவாரா? கேப்டன்சி பணிக்கு சரிப்பட்டு வருவாரா? என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால் அதற்கெல்லாம் அவரது ஆட்டம் பதில் சொன்னது. அதோடு அவரது அணி வரிசையாக வாகை சூடிக் கொண்டே வந்தது. இப்போது அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. குஜராத் அணி மகுடம் சூடுவதை சிக்ஸர் விளாசி உறுதி செய்தார் கில். அதை பவுண்டரி லைனில் நின்று பார்த்த ஹர்திக், பெரிய ஆரவாரம் எதுவும் செய்யாமல் தனது அணியினருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்படியே மைதானத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்த படி நடந்து கொண்டிருந்தார் அவர்.

அப்போது அவரது மனைவி நடாஷா களத்திற்கு வந்தார். உணர்ச்சி மிகுதியில் அவரைக் கட்டி அணைத்து தனது வெற்றிக் கொண்டாட்ட உணர்வுகளை வெளிப்படுத்தினார் ஹர்திக். அது அவரை நோக்கி எழுப்பப்பட்ட அனைத்து கேள்விக்குமான விடையாக இருந்தது. சில நிமிடங்கள் இருவரும் அப்படியே அணைத்தபடி ஃப்ரீஸ் ஆகி இருந்தனர். அந்த காட்சி இப்போது சமூக வலைதளத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தொடரில் தனக்கு ஊக்கம் கொடுப்பது தனது குடும்பம் என சொல்லி வந்தார் ஹர்திக். அவரது சகோதரர், மனைவி மற்றும் மகன் அகஸ்த்யா பாண்டியா குறித்து பேசியுள்ளார் அவர். உண்மையில் இது அவருக்கு உணர்வுபூர்மான தருணம் தான். இப்போது அவர் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in