ஜோகோவிச் & நடால் | 59-வது முறையாக நேருக்கு நேர் பலப்பரீட்சை
பாரிஸ்: நாளை நடைபெற உள்ள பிரெஞ்சு ஓபன் காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் உடன் ரஃபேல் நடால் விளையாடுகிறார். இருவரும் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ள 59-வது போட்டி இது.
நடப்பு பிரெஞ்சு ஓபன் தொடர் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் விளையாட்டு உலகின் முன்னணி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுக்கான தொடர்களில் இதுவும் ஒன்று. இருவரும் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் காலிறுதிப் போட்டியில் விளையாடி இருந்தனர். அதில் ஜோகோவிச் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடால், இதற்கு முன்னர் 13 முறை பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றவர்.
இதற்கு முன்னர் இருவரும் நேருக்கு நேர் மோதி விளையாடியதில் ஜோகோவிச் 30 முறையும், நடால் 28 முறையும் வென்றுள்ளனர். பிரெஞ்சு ஓபன் தொடங்குவதற்கு முன்னர் களத்தில் தனக்கு கடுமையான சவால் கொடுக்கும் போட்டியாளர்களில் நடால் முதல் வரிசையில் இருப்பவர் என ஜோகோவிச் சொல்லியிருந்தார்.
பிரெஞ்சு ஓபன் பட்டத்தை ஜோகோவிச் இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளார். நடால், ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றிருந்தார். அதோடு தொடர்ச்சியாக 13-வது முறையாக காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் நடால்.
