Published : 30 May 2022 06:19 AM
Last Updated : 30 May 2022 06:19 AM

'வாத்தி கம்மிங்'... - ஐபிஎல் 2022 நிறைவு நாள் ஹைலைட்ஸ்

அகமதாபாத்: ஐபிஎல் நிறைவு விழா பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நடனம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கச்சேரியுடன் கோலாகலமாக நடைபெற்றது. தொடரில் கலந்துகொண்ட 10 அணிகளை மையப்படுத்தி ரன்வீர் சிங் நடனமாடினார்.

இதில் சென்னை அணியை குறிக்கும் வகையில் நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடினார். இதேபோன்று ஹைதராபாத் அணிக்காக ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற 'நாட்டு கூத்து' பாடலுக்கு நடனக் கலைஞர்களுடன் நடனம் ஆடினார் ரன்வீர் சிங்.

இசை மழையில் ரசிகர்கள்: நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் 75 ஆண்டுகால இந்திய கிரிக்கெட் பயணத்தை மையமாக கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி நடைபெற்றது. வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் முக்காலா முக்காபுலா, மாரோ மாரோ, ஜனகனமன ஜனங்களை நினை என பாடியபடி ஜெய் ஹோ பாடலுடன் நிறைவு செய்தார்.

அவருடன் அவரது மகன் ஏ.ஆர்.அமீன், சுவேதா, பென்னி தயாள் உள்ளிட்டோரும் பாடல்களை இணைந்து பாடினர். ஒவ்வொரு பாடலையும் ஏர்.ஆர்.ரஹ்மான் குழுவினர் பாடிய போது அவர்களுடன் இணைந்து மைதானத்தில் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் பாடி மகிழ்ந்தனர்.

கின்னஸ் சாதனை சீருடை: ஐபிஎல் தொடரின் 15 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஜெர்சியை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இது 66x42 மீட்டர் என்ற அளவில் இருந்தது. வெள்ளை நிறத்திலான இந்த ஜெர்சியில் ஐபிஎல் அணிகளின் லோகோ இடம் பெற்றிருந்தது. நேற்றைய இறுதி போட்டியின் போது இந்த ஜெர்சியின் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் பட்டம் வென்றது குஜராத்!

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

1.32 லட்சம் ரசிகர்கள் குழுமியிருந்த அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 35 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 பந்துகளில், 22 ரன்களும் சேர்த்தனர். சஞ்சு சாம்சன் 14, தேவ்தத் படிக்கல் 2, ஷிம்ரன் ஹெட்மயர் 11, ரவிச்சந்திரன் அஸ்வின் 6, ரியான் பராக் 15, டிரெண்ட் போல்ட் 11, ஓபெட் மெக்காய் 8 ரன்களில் நடையை கட்டினர்.

ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பைகட்டுப்படுத்தியதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தியதிலும் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் சுழல் நாயகன் ரஷித் கான் முக்கிய பங்குவகித்தனர். ரஷித் கான் 4 ஓவர்களை வீசி 18 ரன்களை மட்டும் வழங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதேவேளையில் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களை வீசி 17 ரன்களை வழங்கி ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரை வெளியேற்றியிருந்தார்.

இந்த 3 முக்கிய விக்கெட்களே ராஜஸ்தான் அணியை முற்றிலும் முடக்கியது. 131 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், டேவிட் மில்லர் 19 பந்துகளில், 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 32 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

முன்னதாக ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் சேர்த்து யுவேந்திர சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். ரித்திமான் சாஹா 5, மேத்யூவேட் 8 ரன்னில் வெளியேறினர். சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணிக்கு ரூ.20 கோடியுடன் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணி ரூ.13 கோடியை பரிசாக பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x