

அகமதாபாத்: முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. கோலாகலமாக நடைபெற்ற இந்த தொடர் நிறைவு பெற்றுள்ளது. இதில் ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உட்பட முக்கிய விருதுகளை வென்ற வீரர்களின் விவரத்தை விரிவாக பார்ப்போம்.
கடந்த மார்ச் 26-ஆம் தேதி மும்பையில் தொடங்கியது ஐபிஎல் 2022. 15-வது ஐபிஎல் சீசனான இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் என வெவ்வேறு இடங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றன. இதில் பிளே-ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. சுமார் 237-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். அனைவரும் இணைந்து ஆயிரம் சிக்ஸர்களுக்கு மேல் நடப்பு சீசனில் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சீசனில் தங்களது அபார திறனை வெளிப்படுத்தி, அதற்கான விருதையும் வென்ற வீரர்கள் குறித்து பார்ப்போம்.
பட்லர் - ராஜஸ்தான் ராயல்ஸ்: அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு கேப் விருதை வென்றுள்ளார் பட்லர். மொத்தம் 863 ரன்கள் அவர் இந்த சீசனில் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக ரன்கள் சேர்த்த வீரரின் வரிசையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார் அவர். இதோடு நடப்பு சீசனின் மோஸ்ட் Valuable வீரர், அதிக சிக்ஸர் (45), அதிக பவுண்டரி (83), பவர் பிளேயர் ஆஃப் தி சீசன், கேம் சேஞ்சர் ஆஃப் தி சீசன், தொடர் நாயகன் உள்ளிட்ட விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
சாஹல் - ராஜஸ்தான் ராயல்ஸ்: அதிக விக்கெட்களை கைப்பற்றிய பவுலர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சுழற்பந்து வீச்சாளரான சாஹல். மொத்தம் 27 விக்கெட்களை அவர் இந்த சீசனில் வீழ்த்தியுள்ளார்.
உம்ரான் மாலிக் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 22 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றுள்ளார். மொத்தம் 22 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார். விரைவில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடரில் இந்திய அணிக்காக அவர் விளையாட உள்ளார்.
எவின் லூயிஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்: நடப்பு சீசனில் சிறந்த கேட்ச் பிடித்த வீரருக்கான விருதை எவின் லூயிஸ் வென்றுள்ளார். கொல்கத்தா அணிக்கு எதிராக ஒற்றைக் கையால் ஒரு கேட்ச் பிடித்து அசத்தி இருந்தார் அவர்.
தினேஷ் கார்த்திக் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: நடப்பு சீசனில் சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் கொண்ட வீரருக்கான விருதை டிகே வென்றுள்ளார். அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 183.33. அதே போல நடப்பு சீசனில் அதிவேகமாக பந்து வீசிய வீரருக்கான விருதை வென்ற குஜராத் வீரர் ஃபெர்குசன் வென்றுள்ளார்.