

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது அந்த அணி.
நடப்பு சீசனில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது குஜராத் அணி. தனியொரு வீரரை நம்பி இருக்காமல் ஆடும் லெவனில் இடம் பெற்று விளையாடும் ஒவ்வொரு வீரரும் மேட்ச் வின்னராக அந்த அணிக்காக ஜொலித்துள்ளனர். கில், சாஹா, ஹர்திக், மேத்யூ வேட், டேவிட் மில்லர், திவாட்டியா, ரஷீத் கான், ஷமி, யாஷ் தயாள், ஃபெர்குசன், சாய்கிஷோர் என ஒவ்வொருவருமே அந்த அணியின் வெற்றியில் அங்கம் வகித்துள்ளனர்.
இறுதிப் போட்டியில் 131 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் மிகவும் நிதானமாக அவசரம் கொள்ளாமல் விளையாடியது குஜராத் அணி. தரமான பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான இந்த வெற்றி நிச்சயம் தரமான வெற்றி தான்.
அதுவும் குஜராத் மண்ணில் உள்ள அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் முதல் சீசனிலேயே கோப்பையை வென்றுள்ளது குஜராத். இந்த முறை 10 அணிகள் ஐபிஎல் அரங்கில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. காலம் காலமாக ஐபிஎல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அணி அனைத்தும் முதல் சுற்றோடு வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.