Published : 29 May 2022 05:00 AM
Last Updated : 29 May 2022 05:00 AM
அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன.
ராஜஸ்தான் அணி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி அறிமுக சீசனான 2008-ல் ஷேன் வார்ன் தலைமையில் மகுடம் சூடியிருந்தது. தற்போது 2-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் அதீத பார்மில் உள்ளார். 4 சதங்கள், 4 அரை சதங்களுடன் 824 ரன்களை வேட்டையாடி உள்ள அவரிடம் இருந்து மீண்டும் ஒருமுறை உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், தேவ்தத் படிக்கல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.
பந்து வீச்சில் இந்த சீசனில் 26 விக்கெட்களை வேட்டையாடி உள்ள யுவேந்திர சாஹல், சாமர்த்தியமாக செயல்படக்கூடிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் ஓபெட் மெக்காய், டிரெண்ட் போல்ட், பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும் குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.
அறிமுக அணியான குஜராத், ஹர்திக் பாண்டியா தலைமையில் அபார செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளது. நடுவரிசையில் டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா ஆகியோர் தங்களது அதிரடியால் அணிக்கு வெற்றிதேடிக் கொடுப்பது பெரிய பலமாக உள்ளது. ஹர்திக் பாண்டியா நிதானமாகவும், பொறுப்புடனும் செயல்படுபவராக திகழ்கிறார்.
பந்து வீச்சில் 18 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள ரஷித் கான் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதிலும் நேர்த்தியாக செயல்படுகிறார். அவரது பேட்டிங் திறனும் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மொகமது ஷமி, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், சாய் கிஷோர் ஆகியோரும் பந்து வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.
ரூ.20 கோடி பரிசுத் தொகை
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2-வது இடத்தைப் பிடிக்கும் அணி ரூ.13 கோடியை பெறும். அதேவேளையில் தகுதிச் சுற்று 2-ல் தோல்வியடைந்த பெங்களூரு அணிக்கு ரூ.7 கோடியும், 4-வது இடம் பிடித்த லக்னோ அணிக்கு ரூ.6.50 கோடியும் வழங்கப்பட உள்ளது.
நிறைவு விழா...
முன்னதாக இன்று மாலை 6.30 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் நிறைவு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உள்ளிட்டோர் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் ஜார்க்கண்டின் புகழ்பெற்ற சவ் நடனம் இடம் பெறுகிறது. நிறைவு விழாவில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளார் ஜெய் ஷா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT