Published : 07 Jun 2014 08:21 PM
Last Updated : 07 Jun 2014 08:21 PM

உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியாவுக்கு முதல் வெற்றி; மலேசியாவை வீழ்த்தியது

தி ஹேக்கில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா, மலேசியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியினால் ஆய பயன் என்ன என்று தெரியவில்லை. பிரிவு ஏ அட்டவணையில் கடைசி இடத்திற்குத் தள்ளப்படாமல் இருக்கலாம் அவ்வளவே.

ஆட்டம் துவங்கி 8வது நிமிடத்தில் ருபிந்தர்பால், மந்தீப் மலேசிய கோல் அருகில் ஊடுருவிச் சென்றனர். கோலை நோக்கி அடித்த அடியை மலேசிய கோலி குமார் நன்றாகத் தடுத்தார்.

9வது நிமிடத்தில் மலேசியா இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. பெனால்டி கார்னர் வாய்ப்பைத் தட்டிச் சென்றது. ஆனால் கோல் விழவில்லை காரணம் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தியதே.

13வது நிமிடத்தில் மலேசிய கோல் எல்லைக்குள் நுழைந்த இந்திய அணிக்கு முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோலாக மாற்ற முடியவில்லை.

14வது நிமிடத்தில் மற்றுமொரு இந்தியத் தாக்குதலில் இந்தியாவுக்கு 2வது பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அடித்த பந்து மோசமாகத் தடுக்கப்பட்டு பந்து மெதுவாக ஜஸ்ஜித் பக்கம் செல்ல அவர் அதனை மடார் என அடிக்க இந்தியாவுக்கு முதல் கோல்!

16வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 3வது பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பினிஷிங் இல்லை. கோலாக மாற்ற முடியவில்லை.

29வது நிமிடத்தில் கேப்டன் சர்தார் சிங் அபாரமாக தனியாக ஒரு பந்தை மலேசிய வீரர்களைக் கடைந்து எடுத்துச் சென்றார். கோலுக்கும் அடித்தார் ஆனால் மலேசிய கோலி குமார் மீண்டும் தடுத்துவிட்டார். ஆனால் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, மீண்டும் மலேசிய கோலி குமார் அபாரமாகத் தடுக்க இந்தியா 1-0 என்றே இருந்தது. இடைவேளை வந்தபோது இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டம் 1-0 என்று இருந்தது.

மொத்தம் 6 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நல்ல ஸ்ட்ரைக்கர்கள், பினிஷர்கள் இல்லாததால் ஒரு கோல் மட்டுமே இந்தியா அடித்தது. மேலும் 17 முறை மலேசிய கோல் எல்லைக்குள் சென்ற இந்திய அணி ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது புரியாத புதிர்.

இடைவேளைக்குப் பிறகு 4வது நிமிடத்திலேயே மற்றொரு பெனால்டி வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைத்தது. சர்தார் சிங் அடிக்க ருபிந்தர் பால் நன்றாக பந்தைத் தள்ளினார். இந்த முறையும் மலேசிய கோலி குமார் சரிசமமான திறமையுடன் தடுத்து நிறுத்தினார்.

பிறகு மலேசியா அருமையான ஒரு மூவில் இந்திய எல்லக்குள் ஊடுருவிச் சென்று கோலை நோக்கி ஷாட் அடித்தது ஆனால் இந்த முறை ஸ்ரீஜேஷ் கையால் பந்தை தட்டி விட்டுத் தடுத்தார்.

ஆனால் அடுத்ததாக மலேசியா பந்தை இந்திய கோல் எல்லைக்குள் கொண்டு சென்றபோது இந்திய வீரர் ரகுநாத் மலேசிய வீரரை தன் உடலால் எட்டித் தள்ள பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. மலேசிய வீரர் அடித்த ஷாட் கோல் வாசலில் தடுக்கப்பட்டது ஆனால் பந்து மட்டையில் பட்டு கோலுக்குள் செல்ல ஆட்டம் 1-1 என்று சமன் ஆனது.

பிறகு 14வது நிமிடத்தில் மலேசியா பெனால்டி வாய்ப்பை விரயம் செய்தது. ஆனால் பந்தை தட்டிப்பறித்த இந்திய அணி வேகமாக முன்னேறி மலேசிய கோல் எல்லைக்குள் சென்றது.ருபிந்தர் பால் பந்தை வேகமாக மலேசிய டி-சர்க்கிளுக்குள் கொண்டு சென்றார்.

அப்போது ஆகாஷ்தீப் கோலுக்கு முதுகைக் காட்டியபடியே காலுக்கு இடுக்கில் சென்ற பந்தை அபாரமாக அடிக்க பந்து கோலுக்குள் சென்றது இந்தியா 2-1 முன்னிலை.

அடுத்தபடியாக மலேசியா பெனால்டி கார்னர் ஒன்றை விரயம் செய்ய, அவர்கள் மட்டையில் பட்டு வந்த பந்தை சர்தார் சிங் மிக வேகமாக எடுத்துச் சென்று முன்னேறினார். மலேசிய வீரர்களில் ஒரு 3 அல்லது 4 பேரை ஏமாற்றி பந்தை கோலுக்குள் எடுத்து சென்று அடிக்க மீண்டும் ஆகாஷ் தீப் வந்த பந்தில் மட்டையை வைக்க இந்தியாவுக்கு 3வது கோல்! இந்த கோலுக்கான முழு பெருமையும் கேப்டன் சர்தார் சிங்கிற்கே செல்லும்.

ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ஸ்ரீஜேஷ் முயற்சியையும் மீறி மலேசியா 2வது கோலை அடித்தது.

இந்த முறையும் கடைசி நேர சொதப்பல் இருந்தது. மலேசியா 3வது கோலை அடித்திருக்கும். கோல் வாசலில் ருபிந்தர் பால் சிங் அருமையாக மலேசிய வீரரை இடையூறு செய்து பந்தைப் பறித்து வேறு திசையில் அடித்தார்.

இந்தியா தற்போது இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் பெற்றுள்ளது.

திங்கட் கிழமை சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x