

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிபையர் - 2 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூரு அணி வெறும் 157 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிபையர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சான், பவுலிங் தேர்வு செய்தார். அதனால் பெங்களூரு அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது.
அந்த அணியின் கேப்டன் டூப்ளசி மற்றும் விராட் கோலி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கோலி 7 ரன்கள் எடுத்து இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த ரஜத் பட்டிதார், டூப்ளசி உடன் 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். டூப்ளசி 27 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். மேக்ஸ்வெல், 13 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருந்த பட்டிதார் 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். 4 பவுண்டரியும், 3 சிக்ஸர்களும் அவர் விளாசி இருந்தார். கடைசி ஐந்து ஓவர்களில் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது பெங்களூரு. நிச்சயம் இந்த கடைசி 5 ஓவர்கள் பெங்களூருவுக்கு ஆட்டத்தில் பலமான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது.
அதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது அந்த அணி. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் விரட்டி வருகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறு அன்று இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடும். ராஜஸ்தான் அணிக்காக பிரசித் கிருஷ்ணா, மெக்காய் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர். போல்ட், அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.