

பாரீஸ்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்பெயினின் ரபேல் நடால் தனது 300-வது வெற்றியை பதிவு செய்தார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 67-ம் நிலை வீரரான பிரான்ஸின் கோரெண்டின் மவுடெட்டை எதிர்த்து விளையாடினார். இதில் ரபேல் நடால் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ரபேல் நடாலுக்கு இது 300-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 300 வெற்றிகளை எட்டிய 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் நடால். இந்த வகையில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 369 வெற்றிகளையும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 324 வெற்றிகளையும் குவித்து முதல் இரு இடங்களில் உள்ளனர். நடால் ஆஸ்திரேலிய ஓபனில் 76 வெற்றிகளையும், பிரெஞ்சு ஓபனில் 107 வெற்றிகளையும், விம்பிள்டனில் 53 வெற்றிகளையும், அமெரிக்க ஓபனில் 64 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளார்.