Published : 07 May 2016 08:55 PM
Last Updated : 07 May 2016 08:55 PM

விரட்டல் மன்னன் விராட் கோலியின் அதிரடி சதத்தில் மூழ்கியது புனே: பெங்களூரு த்ரில் வெற்றி

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 58 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் திகழ தோனியின் புனே அணியை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

7 போட்டிகளில் 6-ல் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் புனே அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

பீல்டிங்கில் சொதப்பிய பெங்களூரு அணியின் ‘உஷ்! கண்டுக்காதீங்க கணங்கள்!’

புனே அணி பேட் செய்த போது உஸ்மான் கவாஜா 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 6 பந்துகளில் 16 ரன்கள் என்று விளாசல் தொடக்கம் கண்ட போது ரஹானேயுடனான தவறான புரிதலில் இருவரும் ஒரே முனையில் நிற்க கவாஜா ரன் அவுட் ஆனார். அந்த இடத்தில் ரஹானே தன் விக்கெட்டைப் பாதுகாத்துக்கொள்ள முனைந்தார், ஆனால் அதற்கான நியாயத்தை பேட்டிங்கில் செய்தார், அவர் இன்றும் சிறப்பாக ஆடி 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 74 ரன்களை விளாசினார். சவுரவ் திவாரி 39 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 69 பந்துகளில் 106 ரன்களைச் சேர்த்து பின்னால் நல்ல அதிரடிக்கு வித்திட்டனர்.

ஆனால் தொடக்கத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் மோசமான பீல்டிங்கினால் ரஹானே, சவுரவ் திவாரி இருவரும் பல முறை பிழைத்தனர், இதில் இருவரும் அவுட் செய்யப்பட்டிருந்தால் புனே அணியின் ஸ்கோர் 150-ஐ எட்ட திணறியிருக்கும்.

பாதிக்கப்பட்ட பவுலர் வருண் ஆரோன்! இவர் ஆட்டத்தின் 6-வது ஓவரை வீசிய போது 3-வது பந்தில் சவுரவ் திவாரி கவர் பாயிண்டில் கொடுத்த கேட்சை பின்னி கோட்டை விட்டார். பிறகு அடுத்த பந்தே பாயிண்டில் வந்த எளிதான கேட்சை சச்சின் பேபி என்ற பீல்டர் நழுவ விட்டார்.

மீண்டும் 8-வது ஓவரின் முதல் பந்தில் இதே வருண் ஆரோன், ரஹானேவுக்கு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச ரஹானே சற்றே திணறி அதனை அடிக்க டாப் எட்ஜ் சிலி மிட் ஆனில் கேட்சாகச் சென்றது ஆரோன் இதனை பிடிப்பது கடினம், வாட்சன் ஏனோ இந்தக் கேட்சை பிடிக்க முயற்சி செய்யவில்லை. அவருக்கு முன்னால் பந்து விழுந்தது.

9-வது ஓவரில் இம்முறை விக்கெட் கீப்பர் ராகுல், சாஅல் பந்தை திவாரி மேலேறி வந்து சுழற்ற பந்து சிக்காமல் பின்னால் சென்றது பந்தை பிடிக்கத் தவறினார் விக்கெட் கீப்பர் ராகுல். பிழைத்தார் திவாரி.

இந்த வாய்ப்புகளுக்குப் பிறகே அவர்கள் செட்டில் ஆகி 106 ரன்களைச் சேர்த்தனர். 14-வது ஓவரில் திவாரி 52 ரன்களில் சாஹல் பந்தில் இம்முறை ராகுல் ஸ்டம்ப்டு செய்ய வெளியேறிய பிறகு ஒரு சிக்சர் அடித்த தோனி 9 ரன்களில் வாட்சனிடம் வீழ்ந்தார். பெரேரா 14 ரன்களைச் சேர்க்க, பாட்டியா 9 ரன்களையும் அஸ்வின் 10 ரன்களையும் சேர்க்க புனே அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணியில் வாட்சன் சிக்கனமாக வீசி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

விராட் கோலியின் அதிரடி சதம்:

விரட்டல் மன்னம் விராட் கோலி ராஹுலுடன் இன்னிங்சை தொடங்கினார். ஆனால் 4 ரன்களில் இருந்த போது கோலியை சுலபத்தில் ரன் அவுட் செய்ய வேண்டிய வாய்ப்பை ஜார்ஜ் பெய்லி தவறவிட்டார், அதன் பலன் தோல்வி!

ராகுலும் கோலியும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்காக 11 ஓவர்களில் 94 ரன்களைச் சேர்த்தனர். 35 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களை அடித்து 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸி. லெக் ஸ்பின்னர் ஸம்ப்பாவிடம் ராகுல் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் கடைசி பந்தில் ஆர்சிபி அதிர்ச்சியடையும் விதமாக டிவில்லியர்ஸ் 1 ரன்னில் அவுட் ஆனார். அவுட் ஆவதற்கு முதல் பந்தே பலத்த எல்.பி முறையீடு எழுந்தது. ஆனால் அடுத்த பந்தே ஸம்ப்பா டிவில்லியர்ஸை வீழ்த்தினார். 12 ஓவர்களில் 97/2 என்ற நிலையில் வாட்சன், கோலியுடன் இணைந்தார்.

ஏற்கெனவே 3 சிக்சர்களை அடித்திருந்த விராட் கோலி, பாட்டியா ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு 2 ரன்களை எடுத்து 31 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார்.

இந்நிலையில் 13 ஓவர்கள் முடிவில் 103/2. அதாவது 7 ஓவர்களில் 89 ரன்கள் தேவை என்ற கிட்டத்தட்ட ஓவருக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் வாட்சன் அதிரடியில் புகுந்தார்.

அஸ்வின் எங்கே?-பெரேரா ஓவரில் 5 பவுண்டரிகள்:

14வது ஓவரை பெரேரா வீச முதல் 3 பந்துகள் ஆஃப் திசையில் தேர்ட்மேன் பாயிண்ட் பகுதிகளில் பவுண்டரி ஆனது. இடைவெளியை அபாரமாக பயன்படுத்தினார் வாட்சன். 4-வது பவுண்டரியும் தேர்ட் மேன் திசையில், 5-வது பவுண்டரி லாங் ஆஃபில் விளாசப்பட்டது. ஒரே ஓவரில் வாட்சன் 5 பவுண்டரிகள் 5-ம் ஆஃப் திசையில்.

ஆனாலும் அடுத்த ஓவரில் கூட அஸ்வினை கொண்டு வரவில்லை தோனி. மீண்டும் ரஜத் பாட்டியாவை அழைக்க வாட்சன் லாங் ஆனில் வானத்திற்குள் சென்று விடுவது போல் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை அடித்தார். கோலி ஏற்கெனவே முதல் பந்தில் பவுண்டரி அடித்திருந்தார். இந்த ஓவரில் 19 ரன்கள். 2 ஒவர்களில் 39 ரன்கள் வந்துவிட சமன்பாடு 6 ஓவர்களில் 69 என்பதாகக் குறைந்தது. இன்னும் கூட அஸ்வினின் நினைவு வராத தோனி ஆர்.பி.சிங்கை அழைத்தார், ஆனால் ஆர்.பி.சிங் அருமையான பந்தில் வாட்சனை எல்.பி.செய்தார், ஆனால் வாட்சன் 13 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் விளாசி திருப்பு முனை இன்னிங்ஸாக அமைந்தது. 17-வது ஓவரில்தான் அஸ்வின் அழைக்கப்பட்டார், கோலி கவரில் பவுண்டரி விளாசி வரவேற்றார். கோலிக்கு பந்து கால்பந்து அளவுக்கு தெரியும் தருணத்தில் அஸ்வினைக் கொண்டு வந்தது என்ன கேப்டன்சியோ தெரியவில்லை.

ஒரு ஓவரில் 7 ரன்கள் பிறகு அஸ்வின் கொண்டு வரப்படவில்லை. 18-வது ஓவரை ஸம்ப்பா வீச, கோலி ஸ்லாக் ஸ்வீப்பில் ஒரு சிக்சரையும் பிறகு நேராக ஒரு சிக்சரையும் அடித்தார். மீண்டும் ஒரு பவுண்டரியையும் தேர்ட் மேனில் அடிக்க, இந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது. 4 ஓவர்களில் 64 ரன்கள் தோனி அணிக்கு ஆணியடித்தது. 19வது ஓவரை ஆர்.பி.சிங் வீச அதுவும் லெக் திசையில் வீச கோலி பிளிக்கில் சிக்ஸ் அடித்து 96 ரன்களுக்கு வந்தார், பிறகு ஒதுங்கிக் கொண்டு நேராக மற்றொரு சிக்ஸ்! அது கோலியின் சத சிக்ஸ். ஐபிஎல் கிரிக்கெட்டில் 2-வது சதம், கோலி டி20-யின் 2-வது சதம். 56 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 102 ரன்களை எடுத்தார் கோலி. 20-வது ஓவரை டிண்டா வீச சம்பிரதாயம் கோலியின் அருமையான பிளிக் பவுண்டரி மூலம் முடிந்தது.

மீண்டும் அஸ்வினை குறைவாக தோனி மதிப்பிட்டுள்ளார், இது குறித்து அவரது சாக்குபோக்குகளைக் கேட்க முடியவில்லை. ஆட்ட நாயகன் விராட் கோலி.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x