

பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால். இத்துடன், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 300 வெற்றிகளை அவர் பதிவு செய்து புதிய மைல் கல்லையும் எட்டியுள்ளார்.
35 வயதான நடால், டென்னிஸ் விளையாட்டு உலகில் ஆடவர் பிரிவுக்கான தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
இந்நிலையில், அவர் நடப்பு ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்றுள்ளார். இது கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று. இதுவரை அவர் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அதில் அதிகபட்சமாக பிரெஞ்சு ஓபன் தொடர் பட்டத்தை 13 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் நாட்டு வீரர் கோரன்டின் மவுடெட்டை எதிர்த்து விளையாடினார் நடால். அவரை 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 300 வெற்றிகளைப் பதிவு செய்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார் நடால்.
இதற்கு முன்னதாக ரோஜர் ஃபெடரர் 369 வெற்றிகளையும், ஜோகோவிச் 324 வெற்றிகளையும் கிராண்ட் ஸ்லாம் ஆட்டங்களில் பதிவு செய்துள்ளனர். நடால் இந்த வரிசையில் இணைந்துள்ள மூன்றாவது வீரராக உள்ளார். நெதர்லாந்து வீரர் போடிக் வேன் டி ஸான்ஷுல்புடன் உடன் மூன்றாவது சுற்றில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளார் நடால்.