

கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அஸ்வின், மணிக்கு 131.6 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசியதாக சொல்லப்படுகிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஸ்பிளே ஆன ஸ்பீடு மீட்டரை வைத்து ரசிகர்கள் இதனை அடையாளம் கண்டுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான அஸ்வின் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான். இந்தப் போட்டியின்போது தான் அஸ்வின் 131.6 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசியுள்ளதாக தெரிகிறது.
இது வழக்கமாக அவர் வீசும் வேகத்தை காட்டிலும் கூடுதலாகும். இந்தப் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் இதனை கவனித்துள்ளனர். உடனடியாக அப்படியே அதைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதோடு அதற்கு விதவிதமாக கேப்ஷனும் கொடுத்துள்ளனர்.
"அதிவேக பந்துவீச்சு விருதை வெல்ல அஸ்வின் முயற்சி செய்கிறார்", "அது ஸ்பீடு மீட்டரின் பிழையாக இருக்கலாம்", "அஸ்வின் தனது ஆக்ஷன் மற்றும் ரிலீஸ் பாயின்டில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதுதான் அவர் வேகத்தை கூட்ட காரணம்", "விரைவில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம்" என நெட்டிசன்கள் சொல்லி இருந்தனர்.
தற்போது நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி குவாலிபையர் இரண்டில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ளும்.