டி20 உலகக் கோப்பை | இந்திய அணியின் திட்டம் என்ன? - ஒரு பார்வை

டி20 உலகக் கோப்பை | இந்திய அணியின் திட்டம் என்ன? - ஒரு பார்வை
Updated on
3 min read

அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கு இந்திய அணியின் திட்டம் என்ன? உலகக் கோப்பைக்கு இந்தியா எப்படி தயாராகி வருகிறது? - இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007 தொடங்கி இதுவரை நடந்து முடிந்த 7 டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஒரே ஒரு முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அது முதல் சீசனான 2007 வாக்கில் நடைபெற்றது. அதன் பிறகு ஒருமுறை மட்டுமே இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. கடந்த 2021 தொடரில் முதல் சுற்றோடு இந்தியா வெளியேறி இருந்தது. நடப்பு ஆண்டுக்கான தொடர் ஆரம்பமாக இன்னும் 143 நாட்கள் எஞ்சியுள்ளன. அதற்குள் இந்திய அணி முழுமையாக இந்தத் தொடருக்கு தயாராவது அவசியம்.

இந்தியா விளையாட உள்ள டி20 போட்டிகள்: உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி விளையாட உள்ள மொத்த டி20 போட்டிகளின் எண்ணிக்கை இப்போதைக்கு 15. தென்னாப்பிரிக்கா - 5, அயர்லாந்து - 2, இங்கிலாந்து - 3 மற்றும் வெஸ்ட் இண்டீஸ் - 5.

இந்தப் 15 போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சிலருக்கு முதல் 7 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக கேப்டன் ரோகித், விராட் கோலி, பும்ரா போன்ற வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அயர்லாந்து தொடரிலும் ஓய்வு வழங்கப்படலாம் என தெரிகிறது. எஞ்சியுள்ள இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் இவர்கள் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இது தவிர இந்திய அணி ஆசிய கோப்பை தொடரிலும் விளையாடுகிறது. இந்தத் தொடர் டி20 பார்மெட்டில் நடைபெறும் எனத் தெரிகிறது. இருந்தாலும் அதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.

உலகக் கோப்பை அணியில் யார் யார்? - இந்திய அணியின் உலகக் கோப்பை அணியில் கேப்டன் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பந்த், பும்ரா, ஷ்ரேயஸ் ஐயர், ஜடேஜா, தினேஷ் கார்த்திக், சஹல் ஆகிய 10 வீரர்கள் நிச்சயம் விளையாடுவது உறுதி.

இவர்களைத் தவிர அணியில் மீதமுள்ள இடங்களை யார் பிடிப்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் போன்ற வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் காயத்திலிருந்து மீண்டால் அணியில் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

ஏனெனில், அண்மைக் காலமாக ஒரே நேரத்தில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் அளவுக்கு இந்திய அணியில் திறன் படைத்த வீரர்கள் உள்ளதே இதற்கு காரணம். கடந்த ஆண்டு கோலி தலைமையில் இந்திய அணி, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. மறுபக்கம் தவான் தலைமையிலான அணி இலங்கையில் விளையாடியது.

இது வெளியிலிருந்து பார்க்க ஆரோக்கியமானதாக தெரிகிறது. ஆனால், அணியை கட்டமைப்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தவறு செய்கிறதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. உதாரணமாக, நடப்பு ஐபிஎல் சீசனில் தவான் 460 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் அவருக்கு தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு மாற்றாக தொடக்க வீரர் ரோலில் விளையாட உள்ள வீரர்களின் ஃபார்ம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இது போல சில தவறுகளை இந்திய அணி செய்துள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அவசியம்தான். ஆனால் அதற்காக ஃபார்மில் இல்லாத ஒருவருக்கு ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது ரசிகர்களின் கேள்வி.

எதிரணி எந்த நாடாக இருந்தாலும் முழு பலத்துடன் வழக்கமான இந்திய அணியில் விளையாடும் வீரர்களை வைத்து விளையாடுவதுதான் நெருக்கடியான தருணங்களில் அணியின் வெற்றிக்கு வித்திடும். அது உலகக் கோப்பை போன்ற தொடருக்கு வெள்ளோட்டமாகவும் அமையும். ஆனால், அதை இந்தியா செய்ய தவறியுள்ளதாகவே தெரிகிறது. கடந்த முறையும் இது மாதிரியான முயற்சியின் காரணமாக உலகக் கோப்பைத் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறியது.

மீண்டும் இப்போது அதே தவறை செய்துள்ளது. இருக்கின்ற 15 போட்டிகளில் 5 போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் மீதமுள்ள 10 போட்டிகளில் இந்தியா முழு பலத்துடன் விளையாட வேண்டும். இல்லையெனில் கடந்த முறையை போல தோல்விக்கு பிறகு பயோ பபுள் அழுத்தம் குறித்து வீரர்கள் மீண்டும் பேச வேண்டிய நிலை உருவாகலாம். அதோடு தொடர் முடிந்ததும் அந்த வீரரை நாங்கள் மிஸ் செய்தோம் எனவும் பேச வேண்டி இருக்கும்.

நடப்பு ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. அதை வைத்துப் பார்க்கும்போது ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் ஏற்கெனவே விளையாடி உள்ள வீரர்களை அணியில் இடம்பெற செய்வது அவசியமானதாக உள்ளது. இதையெல்லாம் கணக்கில் வைத்து இப்போதிலிருந்தே இந்தியா அணியை உருவாக்க வேண்டும். அப்போதுதான் உலகக் கோப்பையை வெல்லும் ஃபேவரைட் அணியாக மட்டும் இல்லாமல் அற்புதமாக விளையாடி இந்திய அணியால் செயல்பட முடியும்.

கேப்டன் ரோகித்: இந்திய அணியின் முழுநேர கேப்டனாக கடந்த நவம்பர் முதல் இயங்கி வருகிறார் ரோகித். இதில் நியூசிலாந்து (3), வெஸ்ட் இண்டீஸ் (3) மற்றும் இலங்கை (3) என தொடர்ச்சியாக 9 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதுவரையில் மொத்தம் 28 டி20 போட்டிகளில் இந்தியாவை ரோகித் வழிநடத்தி உள்ளார். அதில் 24 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ரோகித் ஷர்மாவின் இந்த சக்சஸ் ரேட் இந்தியாவுக்கு மிகவும் சாதகமான ஒன்று. அது உலகக் கோப்பை தொடரில் எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in