

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றும் ஆடும் லெவனில் வாய்ப்பு பெறாத தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு சச்சின் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணிக்காக சர்வதேச அளவில் பல்லாயிரம் ரன்கள் குவித்த பேட்ஸ்மேன். அவரை பார்த்து வளர்ந்த அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் வந்துள்ளது. இடது கை பவுலரான அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். 22 வயதான அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
2021 மற்றும் 2022 என இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அர்ஜுன் பயணித்து வருகிறார். இருந்தாலும் இதுவரை அவருக்கு ஒரு போட்டியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அது குறித்து ரசிகர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால், அவருக்கு வாய்ப்பு கொடுக்காத மும்பை அணி முதல் சுற்றோடு நடப்பு சீசனில் இருந்து வெளியேறியுள்ளது.
இந்நிலையில், SachInsight என்ற யூடியூப் சேனலில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சச்சின் பதில் அளித்து வருகிறார். அதில் ரசிகர் ஒருவர் அர்ஜுன் அணிக்காக விளையாடாதது குறித்து கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ளார் சச்சின்.
"அர்ஜுனிடம் நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உனது பாதை மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும். கிரிக்கெட் விளையாட்டை நீ நேசிக்கின்ற காரணத்தால் விளையாடி வருகிறாய். அதை தொடர்ந்து செய். கடின உழைப்பை வெளிப்படுத்து. அதற்கான பலனை நிச்சயம் பெறுவாய்.
ஆடும் லெவனில் தேர்வாவது குறித்து சிந்திக்காதே. உனது ஆட்டத்தில் உனது சிந்தனையை செலுத்து என்பேன். அதோடு அணி தேர்வு விவகாரத்தில் நான் பங்கு கொள்வதில்லை" என சச்சின் தெரிவித்துள்ளார்.